வடமாகாணத் தமிழரின் உலகளாவிய தாக்கம் சிங்கப்பூரின் ஜனாதிபதி வேட்பாளராக தர்மன்! ஜீவன் தியாகராஜா புகழாரம்

பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருந்தது. சுதந்திரமடைந்ததன் பின்னர் 1966 ஓகஸ்ட் 9 ஆம் திகதி சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிக்குடியரசாகியது. அதற்கு முன்னதாக, முதலாவது உலகப் போர் உக்கிரமாக நடைபெற்றது.

அந்தப் போரின் பின்னரான காலத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் மலாயாவுக்குச் சென்றார். அவர் உட்பட அங்கு சென்ற நபர்கள் தமது முன்னேற்றத்துக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் கடினமாக உழைத்தார்கள். தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

தற்போது சிங்கப்பூர், பொருளாதார, சமூக, பல்லின கலாசார ரீதியாக முன்னேற்றகரமான நிலைமையில் உள்ளது. அந்த நாட்டின் பிரஜைகளும் உயர்ந்த வாழ்வாதார நிலையில் உள்ளார்கள் என்பதைக் கண்கூடாக அவதானிக்க முடிகின்றது.

தர்மன் சண்முகரத்தினத்தின் வரலாறும் மேற்படி நிலைமைகளை மையப்படுத்துவதாகவே உள்ளது. தமிழரான தர்மன் சண்முகரத்தினம் தற்போது சிங்கப்பூரின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குகின்றமை உறுதியாகியுள்ளது. இதன்மூலமாக வடமாகாணத்தைப் பூர்வீகத்தைக் கொண்டவரின் பிறிதொரு நாட்டில் செலுத்தும் தாக்கம் வெளிப்பட்டுள்ளது.

தர்மன் சண்முகரத்தினத்தின் தாயாரின் பெற்றோர் (பாட்டனார்) ஊரெழு மற்றும் உரும்பிராயைச் சேர்ந்தவர்கள். அவருடைய தாத்தா வைத்தியர் விஸ்வலிங்கம். அவர் சிலோனியர்களுடன் சேர்ந்து செந்தூழ் சிவன் கோவிலை கட்டினார்.

அதேநேரம், அவர் ஒரு மருத்துவராகவும் அர்ப்பணிப்பான சேவையை முன்னெடுத்திருந்தார். இவரது தந்தை கே.சண்முகரத்தினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாயார் மலாயாவில் பிறந்தவர்.

பின்னர், தர்மன் சண்முகரத்தினம் ஜப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியில் முதன்மை

தர்மன் சண்முகரத்தினம் லண்டன் ஸ்கூல் ஒஃப் எக்கனொமிக்ஸில் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவராவார். அவர் பட்டப்படிப்புக்கு முன்னதாக, ஆங்கிலோ-சீனப் பாடசாலையில் கல்வி கற்றார்.

பின்னர் 2011 இல் அவர் புலமைப்பரிசிலைப் பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் முதுகலைத் தத்துவப் பட்டம் பெற்றார், மேலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கெனடி அரசாங்கப் பாடசாலையில் பொது நிர்வாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றார். அங்கு அவருக்கு சிறந்த செயல்திறன் மற்றும் தலைமைத்துவத் திறனுக்காக ‘லூசியஸ் என் லிட்டாவர் ஃபெலோ’ விருது வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

அரசியலில் பிரவேசம்

துறைசார்ந்தவொரு பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூருக்கான அரச சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றினார்.

அதனையடுத்து, சிங்கப்பூர் அரசியலுக்குள் பிரவேசித்தார். அவர் முதன்முதலில் மக்கள் செயல் கட்சி ஊடாக அரசியலில் பிரவேசித்தவர். 2001 நவம்பரில் ஜூரோங் ஜிஆர்சி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

மக்கள் செயல்கட்சி 79.75 சதவீத வாக்குகளைப் பெற்றதையடுத்து, ஆட்சி அமைத்தது. அதன்பின்னர் அவர் தொடர்ச்சியாக நான்கு முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர், சிங்கப்பூரின் துணைப் பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சராக பல பரினாமங்களை வகித்ததன் பின்னர் 2019 மே முதல் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சராகவும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் உள்ளார்.

மேலும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாகப் பிரதமருக்கு ஆலோசனை வழங்குபவராகவும், சிங்கப்பூர் நாணய நிதியத்தின் தலைவராகவும் மற்றும் சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டுக் கழகத்தின் துணைத் தலைவராகவும், அதன் முதலீட்டு உத்திகள் குழுவின் தலைவராகவும் வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றார்.

2014 முதல் பொருளாதார மேம்பாட்டு திணைக்களத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்து வரும் அவர், 2011-2019 காலப்பகுதியில் துணைப் பிரதமராகவும், 2011-2015 பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் செயற்பட்டுள்ள அவர் 2007-2015 வரையில் ஒன்பது ஆண்டுகள் நிதி அமைச்சராகவும், 2003-2008 ஐந்து ஆண்டுகள் கல்வி அமைச்சராகவும் இருந்தார்.

பொதுச் சேவையில் பங்களிப்பு

தர்மன் சண்முகரத்தினம் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய போது, எதிர்கால சந்ததியினர் பரந்துபட்ட மற்றும் நெகிழ்வான தகுதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியமை விசேட அம்சமாகும்.

குறிப்பாக, ‘ பாலர் கல்வியின் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றைக் முன்னெடுத்தமையைக் குறிப்பிடலாம். வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்த 2014 ஆம் ஆண்டில் புதிய திட்டத்தை ஆரம்பித்தார்.

கொரோனா தொற்றுப் பரவலின்போது, சிங்கப்பூர்களுக்கான பணிகளை ஆதரித்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்பார்வையிட்ட தேசிய செயற்பாடுகள் தொடர்பான சபைக்கும் தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார்.

முற்போக்கான ஊதியச் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் குறைந்த ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவதையும், சமூக சேவையாளர்களின் நிலைமைகளையும், சமூக சேவை அலுவலகங்களின் திறன்களை மேம்படுத்துவதையும் அவர் மேற்பார்வையிட்டிருந்தார்.

ஏனைய வகிபாகங்கள்

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூருக்கு வெளியே, சிங்கப்பூர், இந்திய மேம்பாட்டு சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார், இது இந்திய சிங்கப்பூர் சமூகத்தில் கல்வி செயற்றிறன் மற்றும் சமூக பின்னடைவை மேம்படுத்த முயல்கிறது.

தர்மன் சண்முகரத்தினம் பல சர்வதேச சபைளுக்குகு தலைமை தாங்கினார், குறிப்பாக பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்களில் கவனம் செலுத்திய அவர், 2017 முதல் 2022 வரை பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் சுதந்திரமான உலகளாவிய சபையின் ஜி-30 முப்பது குழுவின் தலைவராக இருந்துள்ளதோடு 2011 முதல் 2014 வரை சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுவின் முதல் ஆசியத் தலைவராக இருப்பதும் பதவி வகித்திருந்தமையும் விசேடமானதாகும்.

இந்நிலையில் தர்மன் சண்முகரத்தினம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் குழுவிலும், மற்றும் உலகப் பொருளாதார மன்றத்தின் அறங்காவலர் குழுவின் வெளிப்புற ஆலோசனைக் குழுவிலும் உள்ளார்.

இத்தகைய பதவி நிலைகளை வகித்து, உச்சத்துக்கே சென்றுவிட்ட அவருடைய வாழ்வியல் கதை இலங்கைக்கு வெளியே வடமாகாணத் தமிழர்களின் திறனைக் காண்பித்து நிற்கின்றது.

அத்துடன் அவருடைய வாழ்க்கைப் பயணமும் சாதனைகளும் தமிழர்களுக்கு ஒரு மிகச் சிறந்த பாடம். வடமாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் என்ற அடிப்படையிலும், நானும் கலாநிதி விஸ்வலிங்கமும் ஊரெழுவிலிருந்து மலாயாவிற்கும் மீண்டும் இலங்கைக்கும் ஆற்றிய பணியின் ஊடாக புதிய உறவுப்பாலத்தi அமைத்துக்கொண்டேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.