கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான ஆய்வின் பிரகாரமே கடன்மறுசீரமைப்புச் செயன்முறை! மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் தெரிவிப்பு

 

பொருளாதாரக் குறிகாட்டிகள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாக முன்னேற்றமடைந்து வருகின்றபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான ஆய்வின் பிரகாரமே கடன்மறுசீரமைப்புச்செயன்முறை முன்னெடுக்கப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பெரும்பாகப்பொருளாதார செயற்திட்டத்தில் எதிர்வுகூறப்பட்டதை விடவும் மிகவேகமாக நாட்டின் பணவீக்கம் வீழ்ச்சியடைந்திருப்பதுடன், நாணயமாற்றுவீதமும் சாதகமான மட்டத்தை அடைந்திருக்கின்றது.

அதேபோன்று கடந்த மார்ச் மாதம் அடையப்படுமென எதிர்பார்க்கப்பட்ட சில பொருளாதார இலக்குகள் உரிய காலப்பகுதியில் அடையப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு மேலும் சில இலக்குகளை அடைந்துகொள்ளவேண்டியிருக்கின்றது’ என்று ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் முதலாவது மீளாய்வுச்செயன்முறை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதன்பின்னர் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் மறுசீரமைப்புக்கள் என்பன தொடர்பான நிபந்தனைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படக்கூடும் என்றும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள மீளாய்வு ஜுன் மாதத்துக்குரிய தரவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.

அதேவேளை செப்ரெம்பர் மாதத்துக்குள் கடன்மறுசீரமைப்புச்செயன்முறையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.