ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரிமீது காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கல்; தகுதியானவர்களை நியமிக்கும்வரை இடமாற்றத்தை இரத்து செய்க! அரவிந்தகுமார் வலியுறுத்தல்

 

ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் துறைசார் திறமைமிக்க 51 ஆசிரியர்களின் இடமாற்றம் கல்லூரி மீதான காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய பழிவாங்கும் செயற்பாடாகவே அரங்கேற்றப்பட்டிருப்பது தெளிவாகிறது.

ஆகவே, இடமாற்றத்துக்கு உட்பட்டுள்ள 51 ஆசிரியர்களுக்கு ஈடாக பொருத்தமான அதேநேரம் தகுதியான ஆசிரியர்களை நியமிக்கும் வரையில் குறித்த 51 பேரின் இடமாற்றத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மத்திய மாகாண ஆளுநரிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்து எழுத்துமூலம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாநு –

அட்டன் கல்வி வலயத்தில் அமையப் பெற்றுள்ள அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியானது மலையகத்தில் கீர்த்திமிகு கல்லூரியாக திகழ்ந்து வருகிறது. எனினும் அந்த கல்லூரியின் துறைசார் திறமைமிக்க ஆசிரியர்கள் 51 பேர் ஒரே நேரத்தில் திடீரென இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். இச்செயற்பாடு அனைத்து தரப்பினரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹற்றன் வலயக் கல்வி பணிப்பாளரே இந்த திடீர் இடமாற்றத்துக்கு பிரதான காரணம் என கல்லூரி சமூகத்தினர், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்லூரி அபிவிருத்தி சங்க அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கல்லூரியின் 51 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அங்கு நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கென நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் துறை சார் விசேடத்துவ தன்மை எதனையும் கொண்டிருக்கவில்லை என்றும் மேற்கூறப்பட்ட தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

மேலும், ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கே உரித்தான நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே இவ்வாறு ஒரே தடவையில் 51 ஆசிரியர்களுக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவு கணிதத் துறைக்கான ஆசிரியரின் இடமாற்றத்துக்குப் பதிலாக தற்போது நியமிக்கப்பட்டிருப்பவர் அத்துறையில் திறமை மிக்கவராக இல்லை எனவும் அவரால் மாணவர்களின் தேவையை நிறைவேற்ற முடியாது எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஆசிரியர்கள் திடீரென இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதன் ஊடாக அடுத்து வருகின்ற உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுவர் என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மேற்படி, வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் அவர் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டி ஏற்பட்டிருந்த காரணத்தால் அதற்கு பழிவாங்கும் முகமாகவே இவ்வாறு ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 51 ஆசிரியர்கள் திடீர் இடம் மாற்றத்துக்கு உட்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டிருக்கும் நிலையிலேயே இவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடு ஒன்றை செயற்படுத்தியிருப்பது தெளிவாகிறது.

இதனடிப்படையிலேயே, குறித்த பணிப்பாளருக்கு எதிராக பாடசாலை சமூகத்தினர் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் என்பதையும் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஆகவே, ஹற்றன் ஹைலன்ட்ஸ் கல்லூரி விவகாரத்தில் தாங்கள் தலையீடு செய்து கல்லூரிக்கு பொருத்தமான அதேநேரம் தகுதியான ஆசிரியர்களை நியமிக்கும் வரையில் தற்போது இடமாற்றத்துக்கு உட்பட்டிருக்கின்ற 51 ஆசிரியர்களின் இடம் மாற்றத்தையும் இடைநிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள் கிறேன் என தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சின் செயலாளர், மத்திய மாகாண பிரதம செயலாளர், மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.