முத்துராஜா யானைக்கு நேர்ந்த விவகாரம்: தாய்லாந்து அரசிடம் கவலை தெரிவிப்பாம்! பிரதமர் தினேஸ் தகவல்

 

தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானைக்கு நேர்ந்துள்ள நிலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் கவலை தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அழகபெரும சபையில் வலியுறுத்தினார்.

தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறை பயணத்தின் போது இலங்கை அரசு என்ற ரீதியில் தாய்லாந்து அரசாங்கத்திடம் கவலை தெரிவித்துள்ளோம்.

யானை விவகாரத்தால் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது,

விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தாய்லாந்து நாட்டினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானையின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதையிட்டு நாடு என்ற ரீதியில் அனைவரும் கவலையடைய வேண்டும்.

இந்த யானை அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கு அந்த யானை உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயா என்ற விலங்கின நலன்பேண் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் முறைப்பாடளித்துள்ளது.

முத்துராஜா யானை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரெயா அமைப்பு இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் முறைப்பாடளித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த யானையை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல தாய்லாந்து தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிற நாடுகள் அன்பளிப்பாக வழங்கும் விலங்குகளை இலங்கை இவ்வாறான தன்மையில் தான் பாதுகாக்கிறது.

விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது.

இது நாட்டுக்கு கரும்புள்ளியாக காணப்படுகிறது. ஆகவே தாய்லாந்து நாட்டினால் வழங்கப்பட்ட முத்துராஜா யானை விவகாரத்தில் அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் தாய்லாந்து அரசாங்கத்திடம் கவலை தெரிவிக்க வேண்டும். – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற யானை முன்னாள் ஜனாதிபதியால் அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. விகாரைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்க முடியாது.

விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இந்த உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்கின நலன்பேண் அமைப்புக்கள் முறைப்பாடளித்ததை தொடர்ந்து இந்த யானை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு விகாரையின் அனுமதியுடன் கொண்டு செல்லப்பட்டது. தற்போது யானைக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இந்த யானை விவகாரம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்துடன் பேச்சில் ஈடுபட்டுள்ளோம்.இருப்பினும் இந்த யானையை தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் உறுதியான நிலைப்பாட்டில் தாய்லாந்து அரசாங்கம் உள்ளது. – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த விடயம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் இராஜதந்திர மட்டத்தில் கவலை தெரிவிக்க வேண்டும். – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போது முத்துராஜா யானை விவகாரம் தொடர்பில் நாடு என்ற ரீதியில் கவலை தெரிவித்துள்ளோம்.ஆகவே தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.