சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை ஒழுங்குசெய்யுங்கள்! கிழக்கு ஆளுநரிடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

 

(அபு அலா)

கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூப் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்த கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதுதொடர்பில் ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –

நாட்டின் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தில் அதிக முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளை முஸ்லிம்களின் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஒழுங்கு செய்வது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 2023.06.16 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவத்தில் தாங்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நியமனக் கடிதம் வழங்கி வைத்துள்ளீர்கள். இது குறித்து நான் மிகவும் சந்தோசமடைகின்றேன்.

எனினும், அன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாளாகும். முஸ்லிம்கள் ஜூம்ஆத் தொழுகைக்கு செல்ல வேண்டிய நாள். அந்த வைபவத்தை ஒழுங்கு செய்தவர்கள் இதனைக் கவனத்தில் கொள்ளாது அந்த நிகழ்வை நீட்டிச் சென்றதால் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம் அதிகாரிகள், நியமனம் பெற்ற ஆசிரியர்கள், அவர்களது பெற்றோர் எனப் பலரும் ஜூம்ஆவுக்குச் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.

இது குறித்து பலரும் மிகவும் கவலையேடு எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

எனவே, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் எந்தவொரு சமய கடமைகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளத் தேவையான அறிவுறுத்தல்களை அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.