நாட்டின் அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் பொய் வாக்குறுதி வழங்கித் தப்பமுடியாது! எரான் விக்கிரமரத்ன எச்சரிக்கை
வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்படும் பிரேரணைகள் முறையாக செயற்படுத்தப்படுகிறளவா என ஆராயும் பொறுப்பு நாடாளுமன்ற வரவு – செலவு திட்ட அலுவலகத்துக்கு இருக்கிறது.
அதனால் இந்த சட்டம் வந்த பின்னர் எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி தப்பிக்க முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற வரவு – செலவு திட்ட அலுவலகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
நாடாளுமன்ற வரவு – செலவு திட்ட அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் 2015 இல் அன்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது.
அப்போது இந்த சட்டமூலத்துக்கு பல்வேறு விமர்சனங்களைத் தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ வந்து அதில் மாற்றத்தை ஏற்படுத்தி, நாட்டை வங்குரோத்தாக்கி விட்டு சென்றார்.
ஆனால் தற்போது காலம் கடந்தாவது மீண்டும் இந்த சட்டமூலத்தை கொண்டுவந்திருப்பதை வரவேற்கிறோம்.
மேலும், நாட்டில் சூழலை சரி செய்யாமல் சட்டம் கொண்டுவந்து பயனில்லை. நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதற்கு தடையாக இருந்தன.
குறிப்பாக வர்த்தகர் தினேஷ் சாப்டரின் கொலை தொடர்பாக இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதேபோன்று ஓமான் நாட்டு முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரை அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
அதனால் நாட்டில் நீதி நிலைநாட்டப்படுவது தொடர்பில் நம்பிக்கை இல்லாமல் போயிருக்கிறது. அதனால் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதற்கு நாட்டில் சிறந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் சட்டம் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன், கைது செய்யும் நடவடிக்கைகளின்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்ததைபோன்று ஐ.சி.சி.பீ-ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டாம்.
அதனை உடனடியாக நிறுத்துமாறு கேட்கிறோம். ஏனெனில் நாட்டுக்கு முதலீட்டார்கள் வருவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் தடையாக இருக்கின்றன.
அதனால் சட்டம் கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. அதற்குத் தேவையான சூழலையும் ஏற்படுத்தவேண்டும். பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தாவிட்டால் அது முதலீடுகளுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
அத்துடன், நாடாளுமன்ற வரவு – செலவுத் திட்ட அலுவலகம் மிக முக்கியமானதாகும். வரவு – செலவுத் திட்டத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் பிரேரணைகள் முறையாக செயற்படுத்தப்படுகிறதா என ஆராயும் பொறுப்பு இந்த காரியாலயத்துக்கு இருக்கிறது.
அதனால் கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகள் அதிகாரத்துக்கு வந்த பின்னர் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தற்போது இந்த சட்டம் வந்த பின்னர் எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி தப்பிக்க முடியாதுஇ – என்றார்.
கருத்துக்களேதுமில்லை