எந்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் செயற்பட எவருக்கும் இடமில்லை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வதற்கு எவருக்கும் முடியாது. அதேநேரம் மத விடயங்களில் மதத் தலைவர்கள் நல்ல வசனங்களை பேசியும், நல்லிணக்கம், ஒழுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம் பெற்ற, அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாங்கள் அனைவரும் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். எந்தவொரு மதத்தையும் தூண்டிவிடும் வகையில் செயற்படுவதற்கு எவருக்கும் முடியாது. அவ்வாறான கலாசாரத்தை இந்த நாட்டுக்கு கொண்டுவந்தவர்கள் யார் என்பதனை நாம் அறிவோம்.

அன்று கருத்தடை கொத்து, கருத்தடை சிகிச்சை, மருத்துவர் ஷாபி போன்றெல்லாம் கூறினர். ஆனால் இன்று வைத்தியர் ஷாபிக்கு அவரின் தொழில் மீள வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் எந்தவொரு மதத்தை அடிப்படையாகக் கொண்டும் நக்கல் நையாண்டிகளை செய்து ஜோக்கர்களாக முடியாது. என்பதை தெளிவாக தெரிவிக்கிறேன்.

அதேபோன்று மதத் தலைவர்களும் நல்ல வசனங்களை பேசி, நல்லிணக்கம், ஒழுக்கம் , ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.