தீர்வுகாண முடியாத தலைவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை : ஐக்கிய தேசியக் கட்சி!

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத தலைவர்கள் இந்த நாட்டிற்குத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் மீள்புனரமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “1948 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்த நாட்டு மக்களிடம் இலங்கையர் என்ற உணர்வு மட்டுமே இருந்தது.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மதங்களாகவும் இனங்களாகவும் மொழிகளாகவும் பிரிந்து அரசியல் ரீதியாக பேதங்களை ஏற்படுத்தினார்கள்.

இதன்காரணமாக அரசியல்வாதிகள் பலம் வாய்ந்தவர்களாவும் மக்கள் பின்தங்கிய நிலையினை அடைந்தது மட்டுமே 75 வருடங்களாக நடந்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா போன்று நாடுகளில் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு ஒரே நாட்டவர்களாக இருக்கும் காரணத்தினால்தான் அங்கு சட்டமும் ஒரேவிதமாக அமுல்படுத்தப்படுகின்றது,

அந்தவகையில், எமது நாடும் சுதந்திம் பெற்று நூற்றாண்டை அண்டையும்போது முன்னேற்றம் அடைந்த நாடாக அமையவேண்டும்.

டிஎஸ்.சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை ஆரம்பித்தபோது இருந்த அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கையானது இன்று ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி இலங்கையில் உள்ள மக்கள் அனைவரையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குகின்றார்.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கவேண்டும்.
ஜனாதிபதி இந்த நாட்டினை பொறுப்பேற்கும்போது இந்த நாடு பாரிய பின்னடைவிலிருந்தது.

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிபோல் இருந்த நாட்டினை குறுகிய காலத்தில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண விடுதிக்கு மாற்றுவதுபோன்றதொரு செய்பாட்டை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

நன்கு சிகிச்சையளித்து வைத்தியசாலையிலிருந்து வெளியில் கொண்டுவருவதற்கான நடவடிக்கையினையே இன்று ஜனாதிபதி முன்னெடுத்துவருகின்றார்.

அதற்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்படுமானால் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்ட நோயாளியை மீண்டும் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு செல்ல நேரிட்டு விடும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.