ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்பமுடியும் ருவன் விஜேவர்த்தன தெரிவிப்பு

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு. அதனால் வங்குரோத்து அடைந்த நாட்டின் பொருளாதாரத்தை ஓரிரு வருடங்களில் கட்டியெழுப்ப முடியாது.

என்றாலும் தற்போதுள்ள நிலைமையில் ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

கடந்த அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.

இதன் பாதிப்பை மக்கள் கடந்த  ஒரு வருடங்களுக்கு முன்னர் அனுபவித்திருந்தனர். எரிபொருள், எரிவாயு பெற்றுக்கொள்வதற்கான வரிசை, அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடு என மக்கள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

என்றாலும் யாரும் முன்வராத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். வங்குரோத்து அடைந்த நாட்டையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பெடுத்தார்.நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்திருந்தார். ஆனால் எதிர்கட்சிகளிடமிருந்து பலமான ஆதரவு கிடைக்கவில்லை.

இருந்தபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையில் நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்போவதில்லை என்றே எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தன. என்றாலும் ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவம் திறமையை பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.

இதன் மூலம் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு, நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.

என்றாலும் இன்னும்  பல பிரச்சினைகள் இருக்கின்றன. வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை ஓரிரு வருடங்களில் கட்டியெழுப்ப முடியாது.

அதனால்தான் ஜனாதிபதி சர்வதேச நாடுகளுக்கு சென்று, எமது நாட்டுக்கு தேவையான வளங்களை கொண்டுவர அந்த தலைவர்களுடன் கலந்துரையாடி, வருகிறார்.

அதனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கும் முடியாது. பொரிளாதரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியினர் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த தீர்வையும் அவர்கள் முன்வைப்பதும் இல்லை. அவர்களின் திட்டத்தை தெரிவிப்பதும் இல்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.