ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அவசியமா? ஜனநாயகத்துக்குப் பாரியதொரு அச்சுறுத்தல்!  பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஊடக ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் அவசியமா? குறிப்பாக அண்மையில் கொண்டு வரப்படவிருந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் கூட ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் இருந்தன.

இந்நிலையில் இவ்வாறான சட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த திட்டமிடும் போது ஊடகங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு அது ஜனநாயகத்துக்கு பாரியதொரு அச்சுறுத்தலாக அமையலாம் என பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வரைவைத் தயாரித்துள்ளது. இந்த வரைவு தொடர்பில் முக்கியமான மூன்று பிரச்சினைகள் உள்ளன. முதலாவது இந்த சட்டமூலத்தில் மொழியப்பட்டுள்ள ஆணைக்குழு எவ்வாறாக அமையப் போகிறது? என்பதாகும். இரண்டாவது இந்த ஆணைக்குழுவுக்கு இருக்கக் கூடிய அதிகாரங்கள் என்ன? என்பதும், மூன்றாவது இவ்வாறானதொரு சட்டமூலம்  நாட்டுக்கு அவசியமா? என்பதாகும்.

தற்போது இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக 5 பேர் உள்வாங்கப்பட்டுள்ளமையோடு, அதில் ஒருவர் அமைச்சரின் செயலாளராக இருப்பதுடன், மற்றையவர் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் நியமிக்கப்படுவார்.  அத்துடன் மூன்று உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பகூடிய உறுப்பினர்கள் அரசமைப்பு பேரவையின் அனுமதியுடன் நியமிக்கப்பட வேண்டும் என உள்ளது. இருப்பினும் அரசமைப்பு பேரவை என்பது கடந்த காலங்களில் பல தடவைகள் மாற்றப்பட்டு,  இல்லாமல் செய்யப்பட்டு அதன் பிறகு நாடாளுமன்ற குழுவென அறிமுகப்படுத்தப்பட்டது .

ஆகவே இவ்வாறானதொரு நிலைமையில் அவ்வாறு மாற்றப்படுமாகவிருந்தால் ஜனாதிபதி, தான் விரும்பியவர்களை நியமிக்க கூடிய நிலைமை ஏற்படும்.

மேலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறானதொரு சட்டமூலம் அவசியமில்லை. குறிப்பாக அண்மையில் கொண்டு வரப்படவிருந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திலும் கூட ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் உள்ளன.

இந்நிலையில் இவ்வாறான சட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த திட்டமிடும் போது ஊடகங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு அது ஜனநாயகத்துக்கு பாரியதொரு அச்சுறுத்தலாக அமையலாம்இ – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.