அஸ்வெசும போராட்டத்துக்கு மத்தியில் தேசிய கடனை மறுசீரமைக்க முயற்சி!  உதய கம்மன்பில கூறுகிறார்

சர்வதேச பிணைமுறி  வழங்குநர்களின் கோரிக்கைக்கு அமையவே அரசாங்கம் தேசிய கடன்களை மறுசீரமைக்கத் தீர்மானித்துள்ளது.

தேசிய கடன்களை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதிக்கவில்லை. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி இரகசியமான முறையில் தேசிய கடன் மறுசீரமைப்பை நாடாளுமன்றத்தின் ஊடாக இறுதிப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

நாட்டுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை செயற்படுத்தும் போது மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பிறிதொரு விடயத்தை முன்னிலைப்படுத்துவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்ற போது அந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றமை அடிப்படையற்றது. சர்வதேச பிணைமுறி வழங்குநர்களின் கோரிக்கைகளுக்கு அமையவே தேசிய கடன் மறுசீரமைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு நிச்சயம் பாதிக்கப்படும். ஆகவே அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.