தோட்டத் தொழிலாளர்களின் ஈ.பி.எப.;, ஈ.டி.எப். 9 வீத வட்டிக்கு சட்ட உத்தரவாதம் கிடையாது! விஜித ஹேரத் சுட்டிக்காட்டு

பல துயரங்களுக்கு மத்தியில் போராடும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றின் மீது பலவந்தமான முறையில் கை வைக்கப்பட்டுள்ளது.

9 சதவீத வட்டி வழங்களுக்கு எவ்வித சட்ட உத்தரவாதமும் கிடையாது. நடுத்தர மக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு துணை போக முடியாது என்பதால் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

தேசிய கடனை ஒருபோதும் மறுசீரமைக்கப் போவதில்லை என அரசாங்கம் கடந்த காலங்களில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது சர்வதேச பிணைமுறியாளர் குழுவின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அரசாங்கம், நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் மக்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு பாரிஸ் கிளப் உடன் இடம்பெற்ற பேச்சின் போது சகல கடன் வழங்குநர்களும் சமவுடைமையுடன் மதிக்கப்பட வேண்டும்.

எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டது. இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனான செயற்பாடு வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட  வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.இருப்பினும் தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை.

தனியார் துறையில் தொழில்புரியும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மீது அரசாங்கம் கை வைத்துள்ளது.

இவர்களுக்கான வட்டியைத் தீர்மானிக்கும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் பிரதான விநியோகஸ்தர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு விலக்களிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.

தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் அரசாங்கத்தின் தீர்மானத்தில் தனியார் ஆரம்ப விநியோகஸ்தர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனம் கடந்த மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 341 கோடி ரூபா வரி செலுத்தவில்லை.

இதுபோல் பல நிறுவனங்கள் பல கோடி ரூபா வரி செலுத்தவில்லை.இந்த வரியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.வங்குரோத்துக்கு மத்தியிலும் டீல் கொள்கை செயற்படுத்தப்படுகிறது.

ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடும் பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாது.

அட்டை பூச்சிக்கு கடிபட்டு, மழையில் நனைந்து வெயிலில் வாடும் தோட்ட தொழிலாளர்களின் இறுதி சேமிப்பு மீது பலவந்தமான முறையில் கை வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமது குறைகளைக் குறிப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த இரு நாள்களாக அரசாங்க நிதி  தொடர்பான குழுவில் கலந்துரையாடப்பட்டது. ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றுக்கு ஏற்படுத்த போகும் மாற்றம் தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் 9 சதவீத வட்டிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடுவதை நம்ப முடியாது. ஏனெனில் இந்த 9 சதவீத வட்டிக்கு எவ்வித சட்ட உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இந்தக் கொள்கைளை ஏற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே.

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்ற காரணத்தால் தேசிய கடன் மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்தோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.