கடன் மறுசீரமைப்புக் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துக ; இல்லையேல் நிதிஸ்திரத்தன்மையற்ற நிலைமை உருவாகும்!  கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவிப்பு

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் கடன் மறுசீரமைப்பு மக்களிடையே வீண் குழப்பத்தை தோற்றுவித்து அது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையற்ற நிலைமையை ஏற்படுத்தும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை  விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி  தெரிவித்தார்.

நேர்காணலொன்றில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

கடன் மறுசீரமைப்பு நாட்டு மக்களிடையே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் தேசிய கடன் மறுசீரமைப்பு நாட்டின் நிதி நிலைமை உறுதிப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

குறிப்பாக, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் நிச்சயமற்ற தன்மை அல்லது பீதி நிலைமை ஏற்படுமாயின், அது நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்ததல்ல. எவ்வாறாயினும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டு மக்களிடத்தில் ஏற்படும் பீதி நிலை இவ்வாறான சூழலை ஏற்படுத்தலாம். தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விடயங்களை கட்டாயமாக அரசாங்கம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டு மக்களிடத்தில் பீதி ஏற்படாத வண்ணம் இருக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை எங்களால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

மேலும் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை குறைக்க வேண்டும் என்பது நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக நாட்டின் மொத்த கடன் அளவு 83.6  பில்லியனாக காணப்படுகின்றது. அவற்றுள் 42 பில்லியன் உள்நாட்டு கடனாகும். மிகுதி  வெளிநாட்டு கடன்களாகும்.

நாணய நிதியம் இந்த கடனில் 17 பில்லியனை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதன் அடிப்படையில் இந்த 17 பில்லியன் ரூபாவை உள்நாட்டு கடனில் குறைப்பதா அல்லது வெளிநாட்டு கடனில் குறைப்பதா என்பது தொடர்பில் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

கடந்த காலங்களில் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட முட்டாள்தனமான தீர்மானங்கள், பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணற்ற கடன்கள், ஊழல் மற்றும் மோசடி என இவை அனைத்தையும் தற்போது நாட்டு மக்கள் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே வறுமை அவர்களின் கழுத்தை நெரிக்கும் நிலையில் தற்போது கடன் மறுசீரமைப்பு காரணமாக நிதி ஸ்திரத்தன்மையற்ற நிலை தோன்றுமாயின், மேலும் இவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஆட்சியாளர்கள் செய்த தவறுகள் காரணமாக நாட்டு மக்கள் தண்டனை அனுபவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.