63 பெண்களுக்கு பனையோலை இடியப்பத் தட்டுக்கள் வழங்கல்!

 

அபு அலா

‘கொவிட் -19 தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி’ எனும் தொனிப்பொருளில், நிந்தவூர் பிரதேசத்தில் இடியப்பத்தை குடிசைக் கைத்தொழிலாக மேற்கொள்ளும் பெண்களுக்கு லயன்ஸ் கழகத்தின் ஒருங்கிணைப்புடன், பிரதேச தனவந்தர்களின் உதவியுடன் பனையோலையால் செய்யப்பட்ட இடியப்பத் தட்டுகள் கடந்த வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.ரயீஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விவுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் கலந்துகொண்டு இதனை வழங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் பொருளகளை இல்லாது ஒழிக்கும் நோக்கிலும், அதனால் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களைத் தடுப்பதற்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் முன்னெடுக்கப்பட்டுவரும் போசனையான மற்றும் நஞ்சற்ற உணவு திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 63 குடும்பங்களுக்கு தலா 10 இடியப்பத் தட்டுகள் வீதம் வழங்கி அறிமுகப்படுத்தப்பட்டன.

இடியப்பத்தைக் குடிசைக் கைத்தொழிலாக மேற்கொள்ளும் குறித்த 63 பெண்களின் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் அவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபா வீதம் வட்டியில்லாக் கடனை வழங்க லயன்ஸ் கழகம் முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.ஏ.வாஜித், தொற்றா நோய்த்தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ்.இர்சாத், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் வான்மை பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எஸ்.எம்.பௌசாத், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.