சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அனுமதி மைத்திரிபால காலத்திலே வழங்கப்பட்டது! ஈ.பி.டி.பி. ரங்கன் சாடல்

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்திலேயே சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கான அனுமதி வழங்கப்பட்டது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது துறைசார்ந்த அமைசினது ஆளுகைக்குள் உள்ள விடயத்தை, உண்மைத்தன்மையை விளங்கிக்கொள்ளாமல், இங்குள்ள தனது சில கட்சி முகவர்களது கருத்துக்களை ஆராயாமல் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அப்போது பாரம்பரிய கடற்றொழில் முறைமை பாதிக்கப்படுவதாகவும், சிறு தொழிலாளர்கள் தம் தொழிலை இழக்கும் நிலைமை உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமிடலின் பயனாக, இன்று சிறு தொழில்களில் ஈடுபட்ட பலரில் கணிசமானவர்கள் கடலட்டை பண்ணை நடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

அதேவேளை, கடலட்டை பண்ணைக்குரிய அனுமதிகள், அது தொடர்பான துறைசார் ஆட்சி நிறுவனங்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட பின்னரே அப்பகுதி சங்கங்களின் அங்கீகாரங்களுடன்  பண்ணைக்குரிய இடங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்துகொள்ள விரும்பின், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக அந்தத் தகவல்களை சுயாதீனமாக பெற்றுக்கொள்ள முடியும்.

அதை விடுத்து, அவர் இவ்வாறாக தனது முகவர்களது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பிரதிபலிக்க முனைவது அவரது மாண்புக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்த காலப் பகுதியிலேயே யாழ். அரியாலை பகுதியில் கடலட்டை குஞ்சுகளை வளர்ப்பதற்கான அனுமதி சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட அனுமதிகளுக்கான அவதூறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சுமத்தும் அரசியல் நோக்கத்துக்காக கூறப்பட்ட அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பது யாவரும் அறிந்ததே. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.