புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா? சபா குகதாஸ் கேள்வி

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர்கள் வடக்கு அல்ல, தமிழர் தாயகத்தை தாண்டியும் முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஊடகங்களில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

ஆளுநரின் கோரிக்கைக்கு முன்பாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புலம்பெயர் தமிழர்களிடம் இந்த கோரிக்கையை நேரடியாக முன்வைத்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு நேரடியாக சென்றும் தமிழர் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்கள் முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல கடிதத்தை ஊடகங்களுக்கும் உரிய தரப்புக்களுக்கும் வழங்கியுள்ளனர். அதற்கான ஆரோக்கியமான பதிலை இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில், வடக்கு ஆளுநரின் கோரிக்கை வந்துள்ளது. உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் வடக்கல்ல, தமிழர் தாயகத்தை தாண்டியும் முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.

ஆளுநர் ஜனாதிபதியின் நேரடி முகவராக இருப்பதால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி நிறைவேற்ற தயாரா? அப்படி நிறைவேற்றிய பின்னர் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்தால் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.