ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தில் எந்த குறைப்பும் மேற்கொள்ளப்படமாட்டாது! ஐக்கிய தேசிய கட்சி ஆஷூ மாரசிங்க உறுதி

கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தில் எந்த குறைப்பும் மேற்கொள்ளப்படமாட்டாது. தற்போது வழங்கப்படும் 9 வீத வட்டி அவ்வாறே முன்னெடுக்கப்படும்.

அத்துடன் வங்கி கட்டமைப்பு வீழ்ச்சியடையும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய்யாகி உள்ளது என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து  தெரிவிக்கையில் –

நாட்டின் மொத்த கடன் தொகை 83 பில்லியன் டொலராகும். அதில் வெளிநாட்டு கடன் 41 பில்லியன் டொலர். உள்நாட்டு கடன் 42 பில்லியன் டொலராகும். வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர்களைக் குறைத்துக்கொள்ளவும் 15வருடங்களுக்கு கடன் தவணை நீடிப்பு வழங்குவதற்கும் அந்த நாடுகள் இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு விஜயங்களின்போது கடன் வழங்கிய நாடுகளுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடி இந்த இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டிருக்கிறார்.

அதேநேரம் உள்நாட்டு கடனில் 2பில்லியன் டொலர்களை குறைத்துக்கொள்வதை உறுதிப்படுத்துமாறும் அந்த நாடுகள் கோரி இருக்கின்றன.

அதன் பிரகாரமே உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு அரசாங்கம் சென்றது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்போது வங்கி கட்டமைப்புக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் குறைக்கப்படும் எனவும் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு மக்களை ஏமாற்றி வந்தன. ஆனால் எதிர்க்கட்சிகள் தெரிவித்தமைபோல் எந்த விடயமும் இடம்பெறவில்லை.

அதேபோன்று அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் வைப்பு பணத்துக்கு பாதிப்பு ஏற்படும் என பிரசாரம் செய்தார்கள். ஆனால் பண வைப்பாளர்கள் யாரும் இவர்களின் பிரசாரத்தை நம்பவில்லை.

அவ்வாறு நம்பி இருந்தால் அவர்கள் தங்களின் வைப்பு பணத்தை வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்டிருப்பார்கள். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. அதனால் வங்கிகளில் வைப்பு பணத்தில் அரசாங்கம் ஒருபோதும் கை வைக்கப்போவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.

அத்துடன் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை நூற்றுக்கு 9 வீதமாகக் குறைத்தது கோட்டாபய ராஜபக்ஷ்வின் அரசாங்கமாகும். தற்போதுள்ள நூற்றுக்கு 9 வீத வட்டியை அரசாங்கம் குறைக்கப்போவதில்லை. 9 வீத வட்டியை தொடர்ந்து மேற்கொள்வோம். அதனால் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாங்களுக்கு மக்கள் ஏமார்ந்துவிடக்கூடாது.

கடன் மறுசீரமைப்பு செய்ததன் மூலம் பொருளாதாரம் படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் செப்ரெம்பர் மாதமாகும்போது தற்போதுள்ள நெருக்கடி குறைவடைந்து வருமானம் அதிகரிக்கும்போது  பண வைப்புகளுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.