பாதுகாப்பு செயலர்போல் செயற்பட்டிருந்தால் கோட்டாபய இன்றும் பதவியில் இருந்திருப்பார்! ரோஹித அபேகுணவர்தன கூறுகிறார்
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளரை போன்று சிறந்த முறையில் முறையாக செயற்பட்டிருந்தால் இன்றும் அவர் ஜனாதிபதி பதவியில் இருந்திருப்பார்.
எங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.
ஆகவே, அவரை நாங்கள் தொடர்ந்து நாட்டுக்காக பாதுகாப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஹொரன பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
ஜூலை 09 சம்பவம் பல விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பேரவாவியில் நீராடினோம், தாக்கப்பட்டோம், எமது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அரசியல் பயணத்தில் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்க்கொண்டோம். சவால்களை வெற்றிக்கொண்டு மீண்டும் களமிறங்கியுள்ளோம்.
ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுன இரண்டு பிரதான பழைமை வாய்ந்த அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டது.
எவ்வித அரசியல் அதிகாரமும் இல்லாத நிலையில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்றோம்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினோம். பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் அவர் சிறந்த முறையில் செயற்பட்ட காரணத்தால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி, பாரிய போராட்டத்துடன் ஜனாதிபதியாக்கினோம்.
கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் பதவியில் சிறந்த முறையில் செயற்பட்டதை போன்று ஜனாதிபதியாக இருக்கும் போது செயற்பட்டிருந்தால் இன்றும் அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருப்பார்.
எங்களுக்கும் இந்த நிலை தோற்றம் பெற்றிருக்காது. கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ கடினமான சூழ்நிலையில் கொழும்பு துறைமுகத்துக்கு சென்று அங்கிருந்து கப்பலேறி திருகோணமலை சென்று உயிர் தப்பினார்.
மே 09 சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமராக யாரை தெரிவு செய்யலாம் என கோட்டாபய ராஜபக்ஷ எம்மிடம் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, டலஸ் அழகபெரும,ரணில் விக்கிரமசிங்க ஆகியோரில் ஒருவரை தெரிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன தீர்மானித்ததைத் தொடர்ந்து அவரை பிரதமராக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தினோம். அதனை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். நாடாளுமன்றத்தின் ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக்கினோம்.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாக்காத நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார். ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த தீர்மானங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். – என்றார்
கருத்துக்களேதுமில்லை