எனக்கு அறிக்கைகள் தேவையில்லை: வேலை முக்கியம் என்கிறார் பிரசன்ன!

இந்த நாட்டின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களைக் கண்டறிந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அவசர வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறான இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தனியார் துறை உட்பட ஏனைய அரச நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பொருத்தமான முதலீட்டாளர்களைக் கண்டறிய வேண்டும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடலோரப் பாதுகாப்பு மற்றும் சமுத்திர வள முகாமைத்துவத்  திணைக்களம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஏற்கனவே நாட்டின் கடற்கரையோரத்தில் 24 புதிய சுற்றுலாத் தலங்களை அடையாளம் கண்டுள்ளது.

ஆற்றங்கரை, புத்தளம் களப்பு  தீவுகள், குடவ, வைக்காலை, நீர்கொழும்பு களப்பு, கபுன்கொட, ப்ரீத்திபுர, கொக்கல களப்பு, சீதகால்ல, றகவ களப்பு, லுனம களப்பு, மலால லேவாய, கிரிந்த, குனுகலே கடற்கரை, எலிபெண்ட் ரொக்,  சலதீவ் தீவு, தம்பலகமுவ பே,  கவர்னர் ஒப்பிஸ், உப்புவெளி, சம்பல்தீவு கடற்கரை, ஆர்யமல்ல கடற்கரை, நாயாறு கடற்கரை, நந்திக்கடல் கடற்கரை, சாந்தகுளம் கடற்கரை ஆகியவை சுற்றுலாத் தலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நாட்டின் கரையோரத்தில் இவ்வாறான பல இடங்கள் மேலும் கண்டறியப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

நாட்டின் கரையோர சுற்றாடலைப் பாதுகாத்து நாட்டைச் சூழவுள்ள அனைத்து கடற் பிரதேசங்களையும் உரிய முறையில் அபிவிருத்தி செய்வதன் மூலம் எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாட்டின் கடற்கரையோரங்களில் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், கடற்கரையோரங்களில் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பொருளாதார வளங்கள் நிறைந்த இந்நாட்டின் கடற்கரை 1620 கி.மீ. எனவே, இந்த நாட்டின் கரையோரப் பகுதியைப் பாதுகாத்து, கரையோர வளங்களை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். – என்றார்.

இது தொடர்பாக, அறிக்கைகள் தனக்கு அவசியமில்லை என்றும், பணியை மட்டும் செய்தால் போதும் என்றும், தினமும் கலந்துரையாடல்கள்  நடத்தி அறிக்கைகளை முன்வைக்காமல், ஒரு வேலையையாவது செய்து காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.