சுதந்திரத்துக்கு பின் ஆட்சியில் இருந்த சகலரும் நிதி வங்குரோத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும்! எஸ்.எம்.சந்திரசேன கூறுகிறார்

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய வேண்டுமாயின் சுதந்திரத்துக்கு பின்னரான காலத்தில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களின் செயற்பாட்டையும் ஆராய வேண்டும்.

ஆகவே, வங்குரோத்து நிலைக்கு ஆட்சியில் இருந்த அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

பத்தரமுல்லை பகுதியில் உள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பொருளாதாரப் பாதிப்புக்கு பொதுஜன பெரமுன பொறுப்புக்கூற வேண்டும் என்று தவறான நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் தோற்றுவிக்கின்றன.

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய வேண்டுமாயின் 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களின் செயற்பாட்டுக்களையும் ஆராய வேண்டும். 1971 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தேசிய விவசாயம் மற்றும் தேசிய தொழிற்றுறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மூடிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

இறக்குமதிகள் தடைசெய்யப்பட்டதால் தேசிய உற்பத்திகள் குறுகிய காலத்தில் அபிவிருத்தியடைந்தன. இருப்பினும் அந்தக் காலப்பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இந்த பாதிப்பை முன்னிலைப்படுத்தி 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய பொருளாதார கொள்கைத் திட்டத்தை இரத்து செய்து திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. இதனை தொடர்ந்து 30 வருடகால யுத்தம் ஆகிய காரணிகளால் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுஜன பெரமுனவின் கொள்கையை அவர் முறையாக செயற்படுத்தவில்லை. கொள்கைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டார். இறுதியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டு அது ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.