வடக்கு – கிழக்கு பகுதிகள் போராட்ட களங்களாக மாற்றப்பட வேண்டும் – சரவணபவன் தெரிவிப்பு

“மனித புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளப்படுத்தி தங்களுடைய புத்த கோயிலைக் கட்டுகின்றனர்.   இவை பற்றிய தகவல்கள் முற்கூட்டியே தெரிந்தும், அரசாங்கத்தில் வேலை செய்யும் தமிழ் அதிகாரிகளும் கையறு நிலையிலுள்ளனர்”என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மண்டைதீவில்,  இன்று காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் திட்டத்தை தீட்டி தங்களுடைய நிகழ்ச்சி நிரலை ஒப்பேற்றிக் கொண்டு செல்கின்றார்கள்.  அதிலும் தற்போது பிடித்து வைத்திருக்கும் காணிகள் யாவும் வளம் நிறைந்த காணிகள்.
குறிப்பாக பொன்னாலை மக்கள் குடிநீருக்காக பவுசர் மூலம் நீரை பெறுகையில் குடிதண்ணீர்க் கிணறை  கடற்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
இன்றும் தமிழ்ப் புலனாய்வாளர்கள இங்குள்ளனர். அவர்களுக்கு நன்கு சிங்களம் தெரியும். ஆகவே இவை பற்றி அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் கூற வேண்டும். வேறு நாடுகளிலெல்லாம் இவ்வாறான நிலைமைகள் இருந்தாலும் இங்கு எதிர்த்துக் கதைத்தால் வேலை பறிபோகும் நிலையுள்ளது.

வடக்கு – கிழக்கில் சாதுரியமாக நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளனர். நாங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தாது விடின் தங்கள் நடவடிக்கைகளை சாதுரியமாக முன்னெடுப்பார்கள்.

எனவே, ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரல் தற்போதைக்கு முடிவடையாத நிலையுள்ளதால்,  வடக்கு – கிழக்கு பகுதிகள் போராட்ட களமாக மாற்றப்பட்டு தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.