கோட்டாபயவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் இருவேட்பாளர்களை களமிறக்க நேரிட்டிருக்கும்!  சனத் நிஷாந்த தெரிவிப்பு

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கத் தீர்மானித்த போது தனிப்பட்ட முறையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோரே கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வந்தார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் முரண்பட்டிருந்தால் இரு ஜனாதிபதி வேட்பாளர்களை களமிறக்க நேரிட்டிருக்கும் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

பாரிய போராட்டத்துக்குப் பின்னர் மீண்டெழுந்துள்ளோம். உரபற்றாக்குறை மற்றும் விவசாயத்துறை வீழ்ச்சிக்குப் பின்னரே அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதுவே உண்மை. தவறை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விவசாயத்துறை வீழ்ச்சி இயற்கை காரணிகளால் ஒன்றும் ஏற்படவில்லை. சேதன பசளை திட்டத்தை ஒரே கட்டமாக அமுல்படுத்தியதால் விவசாயத்துறை பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் நாளடைவில் பாரிய மக்கள் போராட்டமாக எழுச்சி பெற்றது.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்ட போது பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவிடம் தனிப்பட்ட முறையில் இந்தத் தீர்மானம் சிறந்ததாக அமையுமா எனக் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தேன்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்னர் அவர் ஜனாதிபதி வேட்பாளர் எனத் தற்போது எமக்கு எதிராக அரசியல் செய்யும் விமல் வீரவன்ஸ, உதயகம்மன்பில ஆகியோர் மக்கள் மத்தியில் குறிப்பிட்டு மக்களை ஒன்றுதிரட்டினார்கள். இவ்வாறான நிலையில் கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு அப்போதைய எதிர்க்கட்சி சார்பில் இரு வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டியிருக்கும்.

பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவித்தார்கள். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எழுந்த சவால்களை வெற்றிகொள்ள எமது அரசாங்கம் தோல்வியடைந்ததன் போராட்டம் தீவிரமடைந்தது. அது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.