இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்; உதவி செய்யவேண்டும்! கலாநிதி ஆறு.திருமுருகன் வலியுறுத்து

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு இலங்கையை சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டு தமிழர்கள் உதவிகள் செய்ய வேண்டும் என கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கீரிமலை சிவபூமி முதியோர் ஆச்சிரமத்தில் சுந்தரகைலாச கட்டட திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை தலைமையேற்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்தியா எமக்கு இதனை செய்யவேண்டும்; அதனை செய்ய வேண்டும் என ஏன நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

எமக்கும் உதவிகள் தேவை தான். ஆனால், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் 200 ஆண்டு காலமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து அடிமைகளாக உணவுகளின்றி பல்வேறு துன்பங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் தேவை. எனினும், அவர்களுக்காக நாம் என்ன உதவிகளைச் செய்தோம்.

அவர்கள் தேயிலை, கோப்பி, கொக்கோ போன்றவற்றில் வேலைகளை செய்து இலங்கையின் பொருளாதாரத்துக்காக உதவுகிறார்கள். அத்தகையவர்கள் பல துன்பங்களுடன் அடிமை வாழ்வை வாழ்கிறார்கள்.

அவர்களுக்கு 1000 ரூபா வேதனம் கூட கிடைப்பதில்லை. அத்தகைய மக்களுக்கு தொடர்ந்து நாம் உதவிகளைச் செய்யவேண்டும்.

இளம் பெண்பிள்ளைகள் முதல் வயோதிபர்கள் வரை பற்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் பல் வைத்தியர்கள் பலர் உருவாகி வெளியேறுகிறார்கள். அவர்கள் இந்திய வம்சாவளி மக்களுக்கு வைத்திய சிகிச்சைகள் வழங்கி உதவ வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளும் உள்நாட்டில் உள்ள வசதி படைத்தவர்களும் அந்த மக்களுக்கு உதவிகளை செய்து, அவர்களை காப்பாற்ற வேண்டும்.

சிவபூமி அறக்கட்டளை பல உதவிகளை செய்து வருகிறது. அதுபோல பலரும் அந்த மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும். – என்றார்.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக அமெரிக்கா கலிபோர்னியாவை சேர்ந்த வைத்திய நிபுணர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி திலகா சண்முகசுந்தரம் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவை சேர்ந்த தனலட்சுமி தேவகாந்தன், கௌரவ விருந்தினராக வலி. வடக்கு பிரதேச சபை செயலாளர் சு.சுதர்சன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.