13ஆம் திருத்தச் சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்! சர்வேஸ்வரன் வலியுறுத்து

13 ஆம் திருத்தச் சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் கோருகின்றோம். இது ஏன் வேண்டாம், இதில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன போன்ற காரணங்கள் தான் சமஷ்டிக்கான படிக்கட்டுக்களாக இருக்கப்போகின்றன என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும்போது துரோகிகள், தமிழர்களுக்குத் துரோகமிழைத்துவிட்டார்கள் என இந்தத் திருத்தச் சட்டத்தை பிரிவுபடுத்தி குறுகிய அரசியலாக நோக்குகின்றனர்.

35 ஆண்டுகளாக அரசமைப்பிலுள்ள விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கோரும் உரிமை – பொறுப்பு எங்களுக்கும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கும் காணப்படுகின்றது.

ஆகவே இதை எதிர்க்கும் தரப்பினர் உணர்ச்சிவசப்படுகின்றார்களா அல்லது வாக்குகளை பெறுவதற்கான குறுகிய அரசியல் நோக்காக செயற்படுகின்றார்களா எனத் தெரியவில்லை.

இந்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் இயலுமை எமக்கில்லை.

30 ஆண்டுகளாக உயிர்கள், சொத்துக்களை இழந்தவர்கள் நாங்கள்தான். எமது தீர்வுக்காக இந்தச் சட்டம் வந்தாலும் மாறாக இதன் நன்மைகளைத் தென்னிலங்கையே அனுபவித்தது.

எனினும் யுத்தம் நடைபெறும்போது வர்த்தமானி ஊடாகவும் பரிந்துரைகளூடாகவும் பல அதிகாரங்களை மத்திய அரசு மீள எடுத்துக்கொண்டது.

13 ஆம் திருத்தச் சட்டம் என்பது நாட்டின் நீதியுயர் சட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, இதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் நாடாளுமன்றத்தினூடாகவே மேற்கொள்ள முடிவதுடன் மாறாக நிர்வாக நடவடிக்கைகளூடாகவோ, வர்த்தமானியூடாகவோ, பரிந்துரைகளூடாகவோ மாற்றியமைக்க முடியாது.

இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பில் கைச்சாத்திட்ட இந்தியா, ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை தொடர்பில் அன்று முதல் இன்று வரை ஏதோ ஒரு நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

அமெரிக்காவாயினும் ஐரோப்பிய ஒன்றியமாயினும் ஐக்கிய நாடுகள் சபையாயினும் சரி இந்தியாவை மீறி எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாது.

மாறாக, இந்தியாவின் ஆலோசனைகள், விருப்பங்களில் தான் அனைத்தும் நடக்கும் என்பது சர்வதேச அரசியலில் தற்போதுள்ள யதார்த்தம்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் வரை ஈழமோ அதியுச்சபட்ச சமஷ்டியோ கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்தும் எந்த நாடும் தீர்வு பற்றி எதுவும் பேசவில்லை.

நாங்கள்தான் நாடுகளைத் தேடி கண்டறிந்து எமது தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேச அரசியலை எடுத்துக்கொண்டால் எந்தவொரு நாடும் தனது நலனிலே கவனம் செலுத்தும். அவர்களின் நலனோடு சேர்த்தோ ஒத்திசைவான திசையிலோ எமது பிரச்சினைகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாடே உள்ளது.

இந்நிலையில், இந்தியா தமிழ் மக்களின் பிரச்சினையைக் கையாள்வதன் மூலம் இலங்கை அரசைக் கையாள முடியும் என்பது உண்மை.

ஐக்கிய நாடுகள் சபையில் பீட்டோ அதிகாரத்தை கொண்டிருக்கும் சீனா ஏனைய நாடுகளின் விடயத்தில் வாய் திறப்பதில்லை.

13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வருவதற்க முன்னர் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாகவே காணப்பட்டது.

சட்டம் கொண்டு வந்ததன் பின்னர் 19 பாடசாலைகளே காணப்பட்டாலும், யுத்தத்தின் பின்னர் அகில இலங்கையிலே 350 வரையிலும் வட மாகாணத்தில் 20 பாடசாலைகள் வரையிலும் தேசிய பாடசாலைகளாக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடமும் தேசிய பாடசாலையாக்கத்துக்கு எதிராக மாகாண சபை நியதிச் சட்டத்தை மீறல், 13 ஆம் திருத்தச் சட்டத்தை மீறல் எனும் சாராம்சத்தில் வழக்கை தாக்கல் செய்தேன்.

இதன் தீர்ப்புகளைக் கவனத்திலெடுத்து எதிர்வரும் காலங்களில் ஏனைய துறைகளுக்கும் இம்முறையைப் பிரயோகித்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற முயற்சிக்கலாம்.

எனவே, 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்தியாவுக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய கடப்பாடு உண்டு.

எனவே, இந்த விடயத்தை எங்களுடைய கட்சியினர் எந்தளவுக்கு மேற்கொள்கின்றோம் என மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.