களனிப் பாலத்தில் ஆணிகளை அகற்ற விசேட பொறியியலாளர்; வரவேண்டும்! 5.9 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்கள் மாயம் என்கிறார் பந்துல

களனி கல்யாணி நுழைவாயில் பாலத்தில் ஆணிகளை எவரும் திருடவில்லை. ஆணிகளை அகற்ற விசேட பொறியியலாளர்கள் வருகை தர வேண்டும். நீர் குழாய்,பல வர்ண மின்குமிழ்கள் உட்பட 5.9 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்களே மாயமாகியுள்ளன.

நெடுஞ்சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பு  சபை கூட்டத்தில் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என  போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும்  நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர களனி பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் திருடியுள்ளதாக குறிப்பிட்ட விடயம் பொய்யானது.

களனி  கல்யாணி நுழைவாயில் பாலத்தைக் காட்டிலும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் தான் திருட்டு சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.

கொழும்பு- கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகள்,பாதுகாப்பு இருப்பு கம்பிகள், மின்கம்பிகள், மின்விளக்குகள், ஒளி மற்றும் ஒலி எழுப்பு கருவிகள், நீர் வெளியேறும் பெறுமதியான குழாய்கள், உட்பட பல்வேறு பொருள்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பெறுமதி 294.6 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

களனி கல்யாணி நுழைவாயில் பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான ஆணிகள் போதைப்பொருள் பாவனையாளர்களால் திருடப்பட்டன என வெளியான செய்தி அடிப்படையற்றதாகும்.

களனி பாலத்தில் இரு மருங்கிலும் பொருத்தப்பட்டிந்த பெறுமதியான செம்பு கம்பிகள், பெறுமதியான நீர் குழாய்கள், பல வர்ண மின்குழில்கள் உள்ளிட்ட பொருள்களே மாயமாகியுள்ளன.

இவற்றின் பெறுமதி 5.9 மில்லியன் ரூபா  என மதிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே களனி பாலத்தில் ஆணிகள் காணாமல் போகவில்லை.ஆணிகளைக் கழற்ற விசேட பொறியியலாளர்கள் வருகை தர வேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொது சொத்துக்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.