ஒருநாள் அடையாள அட்டை சேவை வடக்குக்கு வவுனியாவில் வேண்டும்! சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை

ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு கொழும்புக்கு வருகை தரும் வடக்கு  மாகாண மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே, சிரமங்களுக்குத் தீர்வாக வவுனியாவில் ஒரு நாள்  சேவை ஊடாக தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பிரிவு ஒன்றை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆரம்பிப்பாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளைக்கான கேள்வி நேரத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

ஒரு நாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு வடக்கு மாகாணத்தில் இருந்து 25 சதவீதமானோர் ஆட்பதிவு திணைக்களத்துக்கு வருகை தருகிறார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்து, அதிக பணத்தைச் செலவழித்து இவர்கள் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்கிறார்கள்.

மக்கள் எதிர்க்கொள்ளும் சிரமங்களை நிவர்த்தி செய்ய வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை வழங்கல் மையத்தை அமைக்க முடியும்.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை போல் அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்களும் பயனடைவார்கள்.

ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டைப் பெற்றுக்கொள்ள கொழும்புக்கு வரும் வடக்கு மாகாண மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை விநியோக பிரிவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பிக்குமா? – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.