ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகள் தமிழரை ஏமாற்றுவது போலுள்ளன இராதாகிருஷ்ணன் கூறுகிறார்

13 ஆவது திருத்தம் இந்த நாட்டில் இருக்கும் சட்டம். அதனை ஜனாதிபதி இந்தியாவுக்கு சொல்வதில் பயனில்லை. 13 பிளஸ் பற்றி பேசினால் அதனை வரவேற்போம். அதனால் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றுவது போன்றே உள்ளன என மலையக மக்கள் முன்னணி தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாட்டில் சுயாதீனமாக இயங்கிய பல நிறுவனங்கள் இன்று சுயாதீனத்தை இழந்த நிலையில் இருக்கின்றன. பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்றவை நியமிக்கப்பட்டாலும் அவை அரசாங்கத்தின் செல்வாக்கில் இயங்குகின்றன. அதேபோன்ற நிலைமை மத்திய வங்கிக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.

இதேவேளை ஜனாதிபதி இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இந்திய பயணத்துக்கு முன்னர் தமிழ்க் கட்சிகளை சந்திப்பது வழக்கமாகியுள்ளது. 13 ஆவது திருத்தம் என்பது இந்த நாட்டில் இருக்கும் சட்டம்.

அதனை இந்தியாவிடம் சொல்வதில் என்ன உள்ளது. 13 பிளஸ் பற்றி கூறினால் பரவாயில்லை. ஆனால் 13 தொடர்பில் கதைத்து அந்த நிகழ்ச்சி நிரலை இந்தியாவுக்கு கொண்டு செல்வது என்பது ஜனாதிபதி இந்த நாட்டு தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே உள்ளது.

நாட்டில் உள்ள இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக என்று கூறிக்கொண்டு இந்தியாவுக்கு சென்று பல ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கு சென்றிருக்கின்றாரா? என்ற நிலையே ஏற்பட்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.