ஜனாதிபதி தன்னுடைய விருப்பத்துக்கேற்ப மத்திய வங்கி ஆளுநரை நியமிக்கமுடியாது! இப்படிக் கூறுகிறார் அமைச்சர் ஷெகான்

 

உத்தேச மத்திய வங்கி சட்டமூலத்துக்கு அமைய ஜனாதிபதியின் விருப்பத்துக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்க முடியாது.

மத்திய வங்கியின் சுயாதீனத்தை பாதுகாக்க விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மத்திய வங்கியின் உயர் பதவிகள் தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்சிக்காக பல திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் ஒத்துழைப்பை தொடர்ந்து புதிய மத்திய வங்கி சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தேச மத்திய வங்கி சட்டமூலத்தை ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினார்கள்.

சட்டமூல வரைவு தொடர்பில் உயர்நீதிமன்றம் பல திருத்தங்களை முன்னெடுத்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் திருத்தங்களை பரிசீலனை செய்து வரைவுக்குள் உள்ளடக்கியுள்ளோம்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்கள் அனைத்துக்கும் எதிராக நின்றவர்கள் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த சட்டமூலத்தால் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றசாட்டுக்கள் அடிப்படையற்றவை. எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மாத்திரம் எதிர்க்கிறார்கள்.

உத்தேச மத்திய வங்கி சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநரை ஜனாதிபதியால் தனித்து நியமிக்க முடியாது.

நாடாளுமன்றத்தின் அரசமைப்பு பேரவை ஊடாகவே ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும். மறுபுறம் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் நியமனம் நாடாளுமன்றத்தின் ஊடாக நியமிக்கப்பட வேண்டும்.

மத்திய வங்கியின் உயர் பதவிகளை நாடாளுமன்றமே தீர்மானிக்கும். ஆகவே மத்திய வங்கியின் சுயாதீன தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

அரசியல் தலையீடுகள் இல்லாமல் சிறந்த முறையில் செயற்படும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த 70 ஆண்டு காலமாக மத்திய வங்கி சட்டம் திருத்தியமைக்கப்படவில்லை. ஆகவே காலத்துக்கு அமைய சட்டத்தை மாற்றியமைக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.