சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு முதுகெலும்பு இருந்தால் செல்லுங்கள்! கஜேந்திரகுமார் சவால்

தமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது தொடர்பில் தெரிந்துகொள்வதற்கு முதுகெழும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார்.

இப்படியான ஒருவர்தான் தேசிய பொதுப் பாதுகாப்புக்குழுவின் தலைவராக உள்ளார். பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்கனவே சர்வதேச ரீதியாக இந்த நாடு அவநம்பிக்கை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இதுபோன்றவர்களின் செயற்பாடுகளால்தான் நாட்டில், சட்டங்கள் பின்பற்றப்படும் விடயத்திலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனும் சமஷ்டியை வழங்க முடியாது என்று உணர்ச்சியுடன் பேசியிருந்தார்.

தமிழ்த் தேசிய வாதிகள் சமஷ்டி தொடர்பாகப் பேசுகிறார்கள் என்றும் சமஷ்டி என்பது பிரிவினைவாதம் என்றும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவரது இந்தக் கருத்து முட்டாள்தனமான ஒன்றாகும். போர்க்குற்றவாளியான சரத்வீரசேகர இவ்வாறு பேசுகின்றமை சாதாரண விடயம்தான்.

ஆனால், கலாநிதிப் பட்டம் பெற்ற சுரேன் ராகவன், சமஷ்டியை பிரிவினைவாதம் எனக் கூறுகின்றமை, அவரிடம் புலமை இல்லை என்பதையே காண்பிக்கிறது.

ஜனாதிபதி, நல்லிணக்கம் தொடர்பாக பேச்சுநடத்த தமிழ்க் கட்சிகளை அழைக்கும்போதுதான் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதுபோன்றவர்களிடம் நான் சவால் விடுக்கிறேன். முடிந்தால் வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்திக் காட்டுங்கள்.

தமிழ் மக்கள் ஒற்றையாட்டியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது அப்போது தெரியவரும்.

இதற்கு நீங்கள் தயாரா? முதுகெழும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுங்கள். – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.