பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமம் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! ரமேஷ் பத்திரண உறுதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானமாகும். இந்தக் காணி உரிமத்தை வழங்குவதில் தற்போது காணப்படும் நடைமுறை சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் அவதானத்துடனும், உணர்வுபூர்வமாகவும் செயற்பட்டு வருவதாகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமம் இல்லாத விடயம் கவலைக்குரியது. இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கமும், பெருந்தோட்ட நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணி நிச்சயம் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை காணப்பட்ட நடைமுறை யாதெனில் 10 பேர்ச் காணி காணப்பட்டாலும், அதில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான வசதிகள் இல்லாவிட்டால் குறித்த காணிகள் பெருந்தோட்ட மக்களிடம் கையளிக்கப்படமாட்டாது.
பெருந்தோட்ட அமைச்சு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு என்பன இவற்றுடன் தொடர்புபட்டு செயற்படுகின்றன. எனினும் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கமைய , வீடமைப்பதற்காக நிதி வசதிகள் இல்லாவிட்டாலும் 10 பேர்ச் காணிகளை உரிய பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காணி உரிமம் வழங்கப்பட்டால் அந்த மக்களுக்கு கடன் மூலமாக அல்லது ஏதேனுமொரு வழியில் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ள முடியும்.
பெருந்தோட்ட மக்களுக்கு இவ்வாறு காணி உரிமம் இல்லாத விடயம் கவலைக்குரியதாகும். காரணம் அவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே பெருந்தோட்ட நிறுவனங்களும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
கடந்த 1991ஆம் ஆண்டு பெருந்தோட்டத் துறையை தனியாருக்கு வழங்கிய போது 4 லட்சத்து 50 ஆயிரம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காணப்பட்டனர். ஆனால் இன்று பல்வேறு காரணிகளை இந்த தொழிலை அவர்கள் கைவிட்டுச் செல்வதால் தற்போது 150 000 தொழிலாளர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்.
இது தேயிலை தொழிற்துறைக்கு பாரிய சவாலாகும். பெருந்தோட்டத்துறையை பாதுகாக்க வேண்டுமெனில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அரசாங்கமும் , பெருந்தோட்ட நிறுவனங்களும் இணைந்து அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் அவதானத்துடனும் , உணர்வுபூர்வமாகவும் செயற்பட்டு வருகின்றார். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை