மக்களுக்கான சேவைகள் தொழிநுட்பமயமாக்கப்படும்! அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அவசியமான சேவைகளை உடனடியாகவும் முறையாகவும் வழங்க உள்ளூராட்சி மன்றங்கள் தயார்ப்படுத்தப்படும்.

2025 ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்க திட்டமிட்டுள்ளது.

36 வருடங்களின் பின்னர் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இதன்மூலம் வீதிகள் எந்தெந்த நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதும் அடையாளம் காணப்படும்.

தற்போது 69 உள்ளூராட்சி மன்றங்கள் தமது சேவைகளை ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகின்றன.

இந்த வருட இறுதியில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒன்லைன் தொழில்நுட்பம் ஊடாக பொது மக்களுக்கு சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

இதன்மூலம் உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடிகள் தவிர்க்கப்படும்.

வீதி மின் விளக்குகள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய சூரிய சக்தியைப் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக தற்காலிக அடிப்படையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் சேவை புரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. – என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.