அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை!

இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நிர்மாணக் கைத்தொழில் புத்துயிர் பெறுவதற்கான செயற்குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிர்மாணக் கைத்தொழில் புத்துயிர் பெறுவதற்கான செயற்குழு கூட்டம் புதன்கிழமை மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் கடந்த காலங்களில் காணப்பட்ட பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து நிர்மாணத்துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

நிர்மாணத்துறையினருக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய மூன்று மாத நிலுவைத்தொகையை இந்த ஓகஸ்ட் மாதத்துக்குள் வழங்கக் கூடியதாக இருக்கும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு, கடந்த கால பொருளாதார நெருக்கடியால் பாதியில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீள ஆரம்பிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் விருப்பமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் வெற்றியுடன், இந்த நடவடிக்கைகளை துரிதமாகச் செயல்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் அனுசரணையுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு வெளிநாட்டு வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.