ஊடகங்கள் மீது பழி சுமத்த அரசுக்கு உரிமையில்லையாம்! எதிர்க்கட்சி தலைவர் சஜித் காட்டம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளின் காரணமாகவே மக்களுக்கு வீதிக்கிறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கு ஊடகங்கள் மீது குற்றஞ்சுமத்துவது பொறுத்தமற்றது. ஊடகங்கள் மீது பழி சுமத்துவதற்கு அரசாங்கத்துக்கு உரிமையும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –

ஊடகங்களாலேயே நாடு இந்த நிலைமையை அடைந்துள்ளதாக அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். உரத்தட்டுப்பாடு ஏற்பட்டமையும் , அத்தியாவசிய பொருள்களுக்கு வரிசையில் நிற்க வேண்டி ஏற்பட்டமையும் ஊடகங்களால் ஏற்பட்ட விளைவுகளா என அந்த அமைச்சரிடம் கேட்க விரும்புகின்றேன்.

தன்னிச்சையான அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே மக்களுக்கு வீதிக்கு இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைத்தது அரசாங்கமேயன்றி , ஊடகங்கள் அல்ல.  இந்த அரசாங்கத்துக்கு ஊடகங்கள் மீது பழி சுமத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை.

ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து கொண்டு, தீர்மானங்களை எடுத்து அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு மக்களின் துயரம் எ வ்வாறு  புரியும்?

மக்களின் துயரத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமே தவிர, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் ஊடகங்கள் மீது குற்றஞ்சுமத்துவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.