எமது இனம் கல்வியை கைவிடுவது ஆபத்தானது – ஆறு.திருமுருகன் ஆதங்கம்

“தற்போதைய காலத்தில் எமது இனம் கல்வியைக் கைவிடுவதானது துர்ப்பாக்கிய நிலை, அந் நிலையை மாற்றியமைக்க அனைவரும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்” என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று (07) இடம்பெறும் நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தமிழை வளர்ப்பதற்கும் அடுத்த சந்ததிக்குக் கடத்துவதற்கும் இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அற இலக்கியங்கள் பற்றிய சிந்தனை தேவையாகவுள்ளது. அந் நோக்கிலேயே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று உலகம் வியக்க திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலப்பதிகாரமும் உலகளவில் போற்றப்படுகின்றது. எங்கும் எம்மை காப்பாற்றக்கூடியது அறம் தான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என திருக்குறளில் கூறும் குறளானது எந்தவொரு அரசியல்வாதி்களுக்கும் தேவையான கூற்றாகும்.

கண்ணகிக்கு இந்தியாவிற்கு அப்பால் ஈழத்தமிழர்கள் கோயில் கட்டி வழிபாடு செய்தோம். அறம் பிழைக்கின்ற போதெல்லாம் கண்ணகையம்மன் தண்டிப்பார் என்று அறத்திற்கே கோயில் கட்டி மதிப்பளித்தவர்கள் ஈழத்தமிழர்கள்.

திருக்குறள் இல்லாமல் தமிழர்கள் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் தூது என்ற அதிகாரத்தைப் படைத்து தூது என்றால் என்ன என்பதை உலகிற்கு வள்ளுவன் எடுத்துக்காட்டினார். இந்த நாட்டிலே தூதுக்கு அனுப்பப்படவர்களே காட்டிக்கொடுத்தார்கள். தற்போது அரசியலில் தூதுவர்கள் பலர் செல்கின்றார்கள் நாங்கள் தற்பொழுதும் பிழைத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

தமிழ் மாணவர்களின் தொகை குறைந்துகொண்டு செல்கின்றது என பேராசிரியர் பத்மநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். யப்பான் , கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தன் மொழியால் தான் முன்னேறியது. ஆங்கிலத்தை அறிவுக்காக படியுங்கள் அதற்காக தாய் மொழியை உதாசீனப்படுத்தக்கூடாது.

எமது இனமே இன்று கல்வியைக் கைவிடுவதானது துர்ப்பாக்கிய நிலை. எனவே இந் நிலையை மாற்றியமைக்க அனைவரும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். காப்பியங்களை அத்தனை தமிழர்களும் படிக்க வேண்டும் . தற்பொழுது அது பற்றி எவரும் தேடுவதில்லை. அரிய காப்பியங்களை இளைய தலைமுறைகள் படிக்க வேண்டும்” என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.