நாடாளுமன்றில் பெண் ஊழியர்களுக்கு இடம்பெறும் பாலியல் வன்முறை குறித்து விசாரணை வேண்டும்! ரோஹினி குமாரி கோரிக்கை

நாடாளுமன்றத்தின் உணவுப் பிரிவில் சில பெண்களுக்கு இடம்பெற்றிருக்கும் பாலியல் வன்முறையை மறைப்பதற்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை எனத் தெரிவித்து சில தலைவர்கள் குறித்த பெண்களிடமிருந்து பலவந்தமாக கடிதம் ஒன்றை கைச்சாத்திட்டு வருகின்றனர்.

அதனால் இது தொடர்பான விசாரணை முறையாக மேற்கொண்டு வன்முறையை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாடாளுமன்றத்தின் உணவுப் பிரிவில் சில பெண்களுக்கும் மற்றும் யுவதிகளுக்கும் பாலியல் வன்முறைகள் இடம்பெறுகின்றன எனக்  கடந்த சில நாள்களாகப் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.

இது தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள செயலாளர் நாயகம் விசேட குழுவொன்றை நியமித்திருக்கிறார். தற்போது அந்த விசாரணை இடம்பெற்று வருகிறது.

அத்துடன் இந்த சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சம்பந்தப்பட்டதல்ல. பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் உயர் அதிகாரிகளாலே இடம்பெற்றுள்ளது.

தற்போது அதிகாரிகள் சிலர் வன்முறைக்கு ஆளாகியவர்களிடம். அவ்வாறான எந்த சம்பவமும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்து கையெழுத்து எடுத்து வருகின்றனர். அதனால் இந்த விசாரணை நீதியாக இடம்பெறுமா இல்லையா என அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் நேர்மையான விசாரணை மேற்கொண்டு வன்முறை மேற்கொண்டவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். ஏனெனில் இந்த சம்பவம் நாடாளுமன்றத்துக்கும் பாரிய வடுவாகும். – என்றார்.

இதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் பதிலளிக்கையில், இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. அதன் விசாரணை சிறந்த முறையில் இடம்பெற்று வருகிறது. – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.