தென்மாகாணத்தில் 3 மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு

சமனல அணையில் இருந்து  விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை விநியோகித்தால் எதிர்வரும் 16 ஆம் திகதி சமனல அணையின் நீர்மின்னுற்பத்திகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும்.

விவசாயத்துக்கு நீரை விநியோகிப்பதற்கும், தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகிப்பதற்கும் அச்சமில்லாமல் தீர்மானம் எடுப்போம் மாற்றுத்திட்டமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்யாவிட்டால் தென்மாகாணத்தில்  3 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது எதிரணியின் சுயாதீன உறுப்பினர் வாசுதேவ முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றிவை வருமாறு –

சமனல அணையில் இருந்து வளவ தொகுதிக்கு விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீர்மின்னுற்பத்திக்காக மாத்திரமே சமனல அணையில் நீர் சேமிக்கப்படுகிறது. உடவளவ விவசாய நடவடிக்கைகளுக்கும், நீர்பாசன தேவைகளுக்கும் நீரை விடுவிக்குமாறு எந்த ஒப்பந்தமும், இணக்கப்பாடும் செய்து கொள்ளப்படவில்லை.

விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை விடுவிக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி கோரிக்கை முன்வைத்தது. இதற்கமைய நீர் முகாமைத்துவ திணைக்களத்துடன் கலந்துரையாடி சமனல அணையில் இருந்து 0.5 என்ற கொள்ளளவுக்கு அமைய நீர் விடுவிக்கப்பட்டது.

நீர் விடுவிப்பு கொள்ளளவை அதிகரிக்குமாறு நீர்பாசனத்துறை திணைக்களம் கடந்த ஜூலை மாதம் மின்சார சபையின் பொதுமுகாமையாளரிடம் வலியுறுத்தியுள்ளது. இதற்கமைய கடந்த மாதம் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் எம்.சி.2 கொள்ளளவுக்கு அமைய நீர் விடுவிக்கப்பட்டுள்ளது.

நீர் விடுவிப்பு விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு நீர்பாசனத்துறை திணைக்களம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நீர் விடுவிக்கப்பட்டது. வறட்சியான காலநிலை, நீர் மின்னுற்பத்தி உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் நீர் விடுவிக்கப்படவில்லை.

நீர் விடுவிப்பு முடக்கப்பட்டமை தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சின் மீது ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். நீர் முகாமைத்துவ திணைக்களம், ஏனைய நிறுவனங்கள் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்பட்டது. நீர்பாசனத்துறை திணைக்களம் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கோரிக்கை முன்வைத்திருந்தால் இந்தப் பிரச்சினை தோற்றம் பெற்றிருக்காது.

இந்த ஆண்டு 5000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்காத காரணத்தால் 3750 மெகாவாட் மின்சாரத்தை கூட உற்பத்தி செய்வது நிச்சயமற்றதாக உள்ளது. உடவளவ விவசாய பகுதிகளுக்குத் தேவையான நீரை விடுவிக்க வேண்டுமாயின் மாற்று வழிமுறைக்கு செல்ல வேண்டும் என அமைச்சரவையில் குறிப்பிடப்பட்டது.

சமனல அணையில் இருந்து உடவளவ விவசாய பகுதிகளுக்கு நீரை தடையின்றி விநியோகித்தால் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் சமனல அணையின் ஊடான நீர்மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும். இவ்வாறான நிலையில் அவசர நிலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்யாவிட்டால் காலி, மாத்தறை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 3 மணித்தியாலங்கள் மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும். தற்போது மின்சாரத்தை துண்டிப்பது சாத்தியமற்றது.

மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு அச்சமடையப் போவதில்லை. தடையின்றி வகையில் மின்சாரத்தை விநியோகிப்போம் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை பாதுகாப்போம். விவசாயத்துக்குத் தேவையான நீரை விநியோகிப்பதற்கும், மின்சாரத்தை விநியோகிப்பதற்கும் தேவையான தீர்மானங்களை அச்சமில்லாமல் எடுப்போம். கொள்கை ரீதியில் தீர்மானம் எடுப்பதற்கு அச்சமடையப் போவதில்லை. தேர்தலை இலக்காகக் கொண்டு நாங்கள் செயற்படவில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.