13 திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றம் என்ற ரீதியில் ஒன்றுபட்டு தீர்வுகாண எங்களுக்கு முடியாமலுள்ளது! அமைச்சர் ஹரீன் வருத்தம்
13 ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடி காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கிலே ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
என்றாலும் நாடாளுமன்றம் என்ற வகையில் ஒன்றுபட்டு இதற்கு தீர்வுகாண எங்களுக்கு முடியாமல் இருக்கிறது.
நாடு சுதந்திரமடைந்து 75 வருடமாகியும் நாங்கள் அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு காரணம் எங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் இல்லாமையாகும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ எழுப்பிய இடையீட்டு கேள்யொன்று பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நிமல் பியதிஸ்ஸ எம். பி. தெரிவிக்கையில் –
நுவரெலியா மாவட்டத்தில் மலையகத் தோட்ட பிரதேசத்தில் சில இனவாதிகள் அங்கு சிறுபான்மையாக இருக்கும் சிங்கள மக்களை அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை மிகவும் சூட்சுமமான முறையில் இடம்பெற்று வருகிறது. அதனால் இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.
அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் –
நாடு சுதந்திரமடைந்து 75 வருடமாகியும் நாங்கள் அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு காரணம் எங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் இல்லாமையாகும்.
13 ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடி அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியுமான ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே ஜனாதிபதி அனைவரையும் அழைத்திருந்தார்.
அப்போதும் சிலர் வருவதில்லை. சிலர் வந்து ஜனாதிபதி தொடர்பாக தேவையற்ற கேள்விகளை கேட்கிறார்களே தவிர நாட்டுக்குத் தேவையான பதிலைத் தேடுவதற்கு, நாடு அராஜக நிலைக்கு செல்ல காரணமான விடயங்களைத் தேடி, அதற்குத் தீர்வுகாண யாருக்கும் விருப்பம் இல்லை.
அத்துடன் நாடு வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்திலும் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப நாடாளுமன்றம் என்ற வகையில் எமக்கு முடியாமல் போனது.
மனிதர்கள் வீதியில் மரணிக்கும் போதாவது, ஒன்றுபட்டு செயற்பட முடியாமல் போனதொரு நாடாளுமன்றமாகும்.
அதனால் நாங்கள் அராஜக நிலை தொடர்பாகக் கதைப்பதாக இருந்தாலும் காணி அதிகாரங்கள் தொடர்பாகக் கதைப்பதாக இருந்தாலும் ஆரம்பமாக நாங்கள் சுய விசாரணை செய்துகொள்ள வேண்டும்.
மேலும் 13 ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி தொடர்பாகக் கலந்துரையாடி அதற்குத் தீர்வுகாணும் போது, பல்வேறு விமர்சனங்களைத் தெரிவித்து அதனைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.
அதேநேரம் நுவரெலியா பிரதேசத்தில் காணிகளை அபகரிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். அதனால் நாங்கள் அனைவரும் ஓர் இடத்துக்கு வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலே நாடு எதிர்காலத்திலாவது அராஜக நிலையில் இருந்து மீள முடியும்.
அத்துடன் காணி அதிகாரம் இருப்பது ஜனாதிபதிக்காகும். அதில் சில அதிகாரம் காணி அமைச்சருக்கு இருக்கிறது. அதேபோன்று காணி ஆணையாளர் நாயகத்துக்கு சில அதிகாரங்கள் இருக்கின்றன. காணி விடுவிக்கும் அதிகாரம் இருப்பது பிரதேச செயலகத்துக்காகும். அதனால் நாட்டின் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுப்பது இந்த நாடாளுமன்றத்தின் கடமையாகும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை