உடவளவ விவசாய வலய நீர் விடுவிப்பு தாமதம்: அரசுக்கு பாதிப்பில்லை விவசாயிகளுக்கே பாதிப்பு அநுர குமார சுட்டிக்காட்டு

அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான தீர்மானத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகள் வைப்பில் இருந்த பணத்தைக் கொண்டு விவசாயம் செய்யவில்லை.

கடன் பெற்று விவசாயம் செய்தார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உடவளவ விவசாய பகுதிகளுக்கு  நீர் விடுவிப்பு தாமதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அரச தலைவர் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

இயற்கை காரணிகளால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் வீதிக்கு இறங்கிப் போராடமாட்டார்கள்.

விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை விடுவிக்குமாறு வலியுறுத்தி உடவளவ விவசாயிகள் இரு வாரங்களுக்கு மேலாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சமனல அணையில் இருந்து உடவளவ விவசாயப் பகுதிகளுக்கு நீரை விடுவிக்க கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற மாவட்ட விவசாய  கூட்டங்களின் போது தீர்மானிக்கப்பட்டது.

தடையில்லாமல் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீர் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் விவசாயிகளுக்கு வாக்குறுதி வழங்கியது. இதன் பின்னரே விவசாயிகள் விவசாய  நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

வங்கியில் வைப்பு செய்த பணத்தைக் கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்யவில்லை. கடன் பெற்று, சொத்துக்களை அடகு வைத்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்; ஈடுபடுகிறார்கள் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமனல அணையில் நீர் இருந்த போதும் உடவளவ விவசாய வலயத்துக்குத் தேவையான நீரை அரசாங்கம் விடுவிக்கவில்லை.

நீர் விடுவிப்பு தாமதப்படுத்தப்பட்டமை தொடர்பில் மின்சார சபை, நீர்பாசனத் திணைக்களம் மாறுபட்ட கருத்துக்களைக் குறிப்பிடுகின்றன.

நீர் விடுவிப்புக்கு மின்சார சபை இடமளிக்கவில்லை என விவசாயத்துறையுடன் தொடர்புடைய தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். மின்சார சபை அரசாங்கத்தின் ஒரு கட்டமைப்புக்குள் இல்லையா என்பது கேள்விக்கிடமாக உள்ளது.

விவசாயத்துக்குத் தேவையான நீரை விடுவிக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டார்கள்.

பின்னர் நீர் விடுவிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. கடந்த ஒருவார காலத்தில் அரசாங்கம் ஒரு நாடகத்தை அரங்கேற்றி விவசாயத்தையும்,  விவசாயிகளையும் மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

குறுகிய கால பயிர்ச்செய்கைக்கு உரிய நேரத்தில் நீர் பாய்ச்சாமல் இருந்தால் சிறந்த விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாது. உடவளவ வலய விவசாயிகள் தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடவில்லை.

நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டார்கள் என்பதை அரசாங்கம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். நெற்பயிர்ச் செய்கைக்குத் தேவையான நேரத்தில் நீரை வழங்காத காரணத்தால் எதிர்வரும் காலங்களில் இந்தப் பிரதேசத்தில் நெற்பயிர்ச் செய்கை 40 சதவீதமளவில் வீழ்ச்சியடையும். இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.