இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை இராமாயணத்தையும் ஆய்வு செய்யவேண்டும்! இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

இராவணன் இல்லாவிட்டால் இராமாயணம் இல்லை. இராமாயணம் இல்லாவிட்டால் இராவணன் இல்லை. சீதையை இங்கு கொண்டுவராவிட்டால் இராமாயணத்துக்கும் இலங்கைக்கும்  எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்திருக்கும். எனவே இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை, இராமாயணத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என வே. இராதாகிருஷ்ணன்  தெரிவித்தார்.

இராவணன் பற்றிய ஆய்வை  மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புதிக்க பதிரணவால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனி நபர் பிரேரணை மீதான  விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை, இராமாயனத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் இந்த நாட்டுக்கு வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருப்பதும் இhhமாயணமாகும். இராமாயணத்தை ஒட்டி இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதனால் இராமாயணம் இந்த நாட்டுக்குத் தேவை.

அத்துடன் சீதாஎலிய பகுதியில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என வரலாறுகளில் இருந்து எமக்கு அறிந்துகொள்ள முடியும். அதனால்  இராவணனை ஏற்றுக்கொண்டு நாங்கள் நுவரெலியா சீதா எலிய பகுதியில் சீதாவுக்காக கோயில் அமைத்திருக்கிறோம்.

அந்த பகுதியில் யுத்தம் இடம்பெற்றதாகவும் இருக்கிறது. அந்த பகுதியிலேயே ஹனுமான் சீதைக்கு தனது கணயாளி மோதிரத்தை கொடுத்ததாக கதை இருக்கிறது. அதேபோன்று அந்த பகுதியில் இருக்கும் மண் கறுப்பாக இருப்பதும் ஆய்வுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அந்த பகுதியில் ஹனுமானின் பாதம் பதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே இந்த நிகழ்ச்சிகளுக்கு முக்கியமான விடயம் இராமர் என்பவரை நாங்கள்  ஒரு கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம். இராமர் பிறந்த இடம் அயோத்தியில்  இருந்துதான் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.அதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலமாக இருப்பதும் இந்த ராமாயணமாகும்.

எனவே இராவணன் இல்லாவிட்டால் இராமாயணம் இல்லை. இராமாயணம் இல்லாவிட்டால் இராவணன் இல்லை. சீதையை இங்கு கொண்டுவராவிட்டால் இராமாயணத்துக்கும் இலங்கைக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்திருக்கும். அதனால் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் இதுதொடர்பாக கருத்திற்கொள்ள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.