டைனமைற் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருள்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.
ஜெல் வோட்டர் (டைனமைற்) பயன்படுத்தி மீன்களை பிடிப்பதால் ஏராளமான மீன் வளங்கள் அழிவடைகின்றன எனவும், இதனைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிப்பதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை தயாரிக்குமாறும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
டைனமைற் பயன்படுத்தப்படுவதால் திருகோணமலை, கற்பிட்டி, மன்னார் மற்றும் தென்பகுதியிலும் கடல் வளம் அழிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் – டைனமைற் பயன்படுத்துவோருக்கான விநியோக மார்க்கங்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் இதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றிவளைப்புகள் தொடர்பில் கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்குமாறும் தெரிவித்தார்.
இதற்கான உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக கடற்றொழில் சட்டமூலம் மற்றும் சுடுகலங்கள், வெடிபொருள்கள் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் குறித்த சட்டங்களில் இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் இல்லாவிடில் புதிய சட்டமூலங்களைத் தயாரிக்க முடியும் எனவும் கூறினார்.
டைனமைற் பயன்படுத்துவதால் அழிவடையும் மீன்களை இனங்காண்பதற்கு நாரா நிறுவனத்தில் போதுமான அதிகாரிகள் இல்லையெனில் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் கடற்றொழில் திணைக்களத்தின் பிராந்திய அதிகாரிகளுக்கு அறிவித்து இம் மீன்களை இனங்காண்பதற்கான திட்டங்களை வகுக்குமாறும் அதற்குரிய நிதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிக ரணதுங்க, பொலிஸ் திணைக்கள சுற்றாடல் பிரிவுப் பொறுப்பதிகாரி, கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு துறைகளின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை