ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி – ஜனாதிபதி பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடர்பான புலனாய்வு அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்ட அதேவேளை இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டை போன்று மக்களை வன்முறையாளர்களாக்கி வீதியில் இறக்கி அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு ஒருநிலைக்கு வந்துள்ளது, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அதேநேரம் மக்களின் முழுமையான ஒத்துழைப்பும் அதற்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு பல்வேறு மக்கள் நலசார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அனைத்து வழிகளிலும் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வறட்சியை காரணம் காட்டி மக்களை வன்முறைக்குள் தள்ளுவதற்கு இடமளிக்க முடியாது. விவசாயத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.