அம்பாறை உலமா சபையினருக்கும் ஹரீஸ் எம்.பிக்கும் இடையில் சந்திப்பு

 

(நூருல் ஹூதா உமர்)

அம்பாறை மாவட்ட கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையினருக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுடனான சிநேக பூர்வமான சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் கல்முனை காரியாலயத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபைத்தலைவர் மௌலவி பி.எம்.ஏ ஜலீல் (பாகவி) தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த உலமாக்கள், கல்முனை மாநகர எல்லை பிரதேசங்களிலும், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் ஹலால் இறைச்சி விற்பனையை உறுதிப்படுத்தல் தொடர்பில் ஆழமாகக் கலந்துரையாடினர். மேலும் கல்முனை பிராந்தியங்களில் உள்ள அனாச்சார செயல்களை கட்டுப்படுத்தல், இளைஞர்கள் மத்தியில் தலைதூக்கியுள்ள போதைப்பொருளை இல்லாதொழிக்க முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

மேலும், கல்முனை மக்கள் எதிர்நோக்கும் சமூக, சமய, கலாசார மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றியும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.