மந்தை காடுகள் விடுவிக்கப்பட வேண்டும் -கு.திலீபன் எம்பி

”மக்களால் பயன்படுத்தப்பட்டு மந்தை காடுகளாக உள்ள இடங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்ற  கருத்தினை முன்வைத்திருக்கின்றோம் என வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (16) இடம்பெற்றிருந்தது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான அதாவது மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான கூட்டம் நேற்றைய தினம்  இடம்பெற்றிருந்தது.

இதில் ஓரளவு திருப்தியாக உள்ளது. ஓரளவெனில் 35 வீதமே என்னால் திருப்தி கொள்ள முடியும். காரணம் ஜனாதிபதியின் இந்த திட்டமானது 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான குறித்த திட்டமானது கிராம மக்கள் வரை சென்றடையவில்லை. கூகிள் வரைபடத்தை வைத்தே இந்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

முப்பதாயிரம், நாற்பதாயிரம் ஏக்கர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற அந்த இடங்கள் அனைத்தும் ஏற்கனவே மக்கள் வாழக்கூடிய பகுதி. நாம் கேட்ட விடயம் ஏற்கனவே மக்களால் பயன்படுத்தப்பட்டு மந்தை காடுகளாக உள்ள இடங்களை விடுவிக்க வேண்டும் என்கின்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றோம்.

ஜனாதிபதியிடமும் இந்த விடயங்களை முன்வைத்திருக்கின்றோம். அதேபோல் மத்திய தர வகுப்பு காணி பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணி ஆனால் அந்த மத்தியதர வகுப்பு காணிகளை துப்பரவு செய்கின்ற போது வனவள திணைக்களம் கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.

அது ஒரு தீர்மானமாக எடுக்கப்பட்டது. மத்திய தர வகுப்பு காணிகள் அனைத்தும் பிரதேச செயலாளருக்கே சொந்தமானவை. அந்த மக்கள் மீண்டும் வந்து கேட்கின்ற போது கையளிக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம்.

இரண்டு வார காலம் அவகாசம் எடுக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள், அதேபோல் கிராம மட்டங்கள் தோறும் கிராம சேவையாளர் ஊடாக இந்த தரவுகள் திரட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் எனத்  தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.