புற்றுநோயாளர்களுக்கான சி.ரி.சிமிலேற்றர் மீளவும் தெல்லிப்பழையில் இயங்குகின்றது! வைத்திய அத்தியட்சகரின் தீவிர முயற்சியால்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கான அந்த நோயின் பரவல், வீரியம், தாக்கத்தின் அளவு என்பவற்றைக் கண்டறியும் இயந்திரமான சி.ரி.சிமிலேற்றர் இயந்திரம் பழுதடைந்தமையால் வைத்தியசாலைக்கு வரும் புதிய புற்றுநோய் தாக்கத்துக்கு  உட்பட்டவர்களுக்கு ஸ்கான் செய்து அவர்களுக்குரிய கதிர்வீச்சு சிகிச்சையை முறையாக கால நிர்ணயம் செய்து வழங்கமுடியாத அவல நிலைமை காணப்பட்டது.

இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் தென்னிலங்கையில் இருந்தும்கூட நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சிரமத்தின் மத்தியில் வருகைதந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் அவல நிலைமை காணப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து நோயாளர்கள், வடக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மாகாண  சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் கருத்துக்களைக் கேட்டு செய்தி பிரசுரித்திருந்தன.

இந்த விடயம் ஊடகங்களில் வரும்போதே அதற்கான கொள்வனவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் எம்.றெமான்ஸ் தெரிவித்திருந்தார். ஆயினும், இந்த விடயம் பூதாகரமானதைத் தொடர்ந்து வைத்திய அத்தியட்;சகர் தீவிர முயற்சி மேற்கொண்டதன் பயனாக 15 லட்சம் ரூபா செலவில் அதற்கான திருத்தவேலைகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுபூர்த்தியடைந்துள்ளன.

இது தொடர்பாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் லயன் சி.ஹரிகரன் கருத்துத் தெரிவிக்கையில் –

இந்த விடயத்தில் உடன் துரித நடவடிக்கை மேற்கொண்ட வைத்திய அத்தியட்சகர் எம்.றெமான்ஸ் மற்றும் வைத்தியசாலைச் சமூகம், மாகாண, மத்திய சுகாதாரத் திணைக்களத்தினருக்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன், இந்த விடயத்தை வெளியே கொண்டுவந்த ஊடகங்கள், மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். வழமைபோன்று எவ்வித தடங்கலும் இல்லாமல் புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.