வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் தமிழர்களை பிரபாகரன் ஒன்றிணைத்தார்! சாள்ஸ் நிர்மலநான் சுட்டிக்காட்டு

 

விஜயரத்தினம் சரவணன்

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களிடையிலும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடையிலும் இருக்கின்ற ஒற்றுமையின்மை காரணமாகவே இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் தமிழர்களை இலகுவாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு வழிநடத்துகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் அந்த அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற ஒன்றிணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கி, நாம் ஒரே தமிழர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று அடையாளப்படுத்தினார் எனவும் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு’ எனும் வரலாற்று நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

மலையக மக்களுடைய 200 வருட வாழ்க்கை வரலாற்றை ஏன் எழுதவேண்டும் என்பதைப்பற்றி நாம் சற்றுச் சிந்திக்கவேண்டும்.

ஒரு புத்தகம் எழுதுவதாகவிருந்தால் அதற்கு ஒரு காரணம் வேண்டும்.

இந்தப் புத்தகத்தை இரா.சுப்பிரமணியம் பல வேலைப் பழுக்களுக்கு மத்தியில் ஏன் எழுதினார் என்பதைச் சிந்திக்கவேண்டும்.

ஏன் எனில், கடந்த 200 வருடங்களாக மலயக மக்கள் பட்ட துன்ப துயரங்களை ஒரு பதிவாக, இன்னும் பல்லாயிரம் வருடங்களுக்குப் பிற்பாடு தாம் பட்ட துன்ப துயரங்களை தமது சமுதாயம் திரும்பிப் பார்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இதனை வெறுமனே புத்தக வெளியிட்டு விழாவாக மாத்திரம் கருதமுடியாது.

புத்தகங்களை இங்கிருந்து வாங்கிச் சென்று, சில நாள்களுக்குப் பிற்பாடு அந்தப் புத்தகம் எங்கே என்று தெரியாத ஒரு சமூகக் கலாசார சூழலில்தான் நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

புத்தகங்கள் படிக்கின்ற ஆற்றல் குறைந்து சமூகவலைத் தளங்களில் எமது பார்வைகள் அதிகமாகியிருக்கின்றன.

ஆனால் புத்தகங்களில் இருக்கின்ற அந்த வரலாறுகளை நாங்கள் நிச்சயமாகப் படிக்கவேண்டும்.

எங்களுடைய வரலாறுகள் என்னவென்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

எங்களுடைய முன்னோர்கள் எங்களுக்காகப் பட்ட துன்பங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு அறிந்துகொண்டால்தான் நாம் சரியாக வாழமுடியும்.

எங்களுக்காக எங்களுடைய முன்னோர்கள்பட்ட துயரங்களை அறிந்தால் நாம் சரியான சிந்தனையுடன், நாம் நல்ல வழிகளில் வாழ்வதற்கு எங்கள் முன்னோர்கள் செய்த தியாகங்கள், துன்பங்கள் எமக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
அந்தவகையில் இந்த இரா.சுப்பிரமணியம் அவர்களை நான் வாழ்த்திநிற்கின்றேன்.

ஒருவரலாற்றை பதிவிட்டு அனைத்து மக்களுக்கும் சென்று சேரக்கூடியவகையில் இந்தப் புத்தகத்தை அவர் அமைத்திருக்கின்றார்.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு நாம் இந்த மண்ணில் சுதந்திரமாக எமது கலாசார அடிப்படையில், மதஅடிப்படையில், இன அடிப்படையில், மொழி அடிப்படையில் ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம்.

ஆனால் தற்போது பெரும்பாண்மை இனத்தவர்கள் எங்களை வழிநடத்துகின்ற, எம்மை துச்சமாக நினைக்கின்ற அளவிற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களிடையிலும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடையிலும் இருக்கின்ற ஒற்றுமையின்மை காரணமாகவே இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் எம்மை இலகுவாகத் தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்வாறு வழிநடத்துகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வடக்கு, கிழக்கு, மலையைகம் என்ற ஒன்றிணைந்த ஒரு கட்டமைப்பை உருவாகியிருந்தார். அத்தோடு மலையகத்தில் பொங்குதமிழ் நிகழ்வொன்று அப்போது மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு, கிழக்கு மற்றும், மலையகத்தில் பொங்கு தமிழ் மேற்கொள்வதனூடாக நாம் மூன்று பகுதிகளிலும் ஒரே தமிழர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று அன்று பிரபாகரன் அடையாளப்படுத்தினார்.

ஆனால் தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மூன்றுபகுதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு இல்லாமல் , வடக்கிற்கு வேறாக, கிழக்கிற்கு வேறாக, மலையகத்துக்கு வேறாக தமிழ் மக்கள் பிரிந்து நிற்கின்றனர்.

இது எமது முன்னோர்களுக்கு நாம் செய்கின்ற துரோகமாகவே பார்க்கிறேன்.
முடிந்தவரையில் நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பயணிப்போம் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.