எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை விரைவில் ஸ்தாபிப்போம் டிலான் சூளுரை

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முயற்சிகளை தோற்கடிப்பது அத்தியாவசியமானது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

மாத்தறை, கம்புறுபிட்டி பகுதியில் இடம்பெற்ற சுதந்திர மக்கள் சபையின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

ராஜபக்ஷர்களின் பாதுகாவலனாகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்  விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். நெருக்கடியான சூழலில் எவரும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கவில்லை என்று குறிப்பிடுகின்றமை தவறு. அரசாங்கத்தைப் பொறுப்பேற்கத் தயார் என சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகபெரும அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டார்.

டலஸ் அழகபெருமவை பிரதமராக்க வேண்டாம் என பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். ராஜபக்ஷர்களுக்கு எதிரானவர்களைப் பிரதமராக்கினால் ராஜபக்ஷர்களின் எதிர்கால அரசியல் பாதிக்கப்படும் என்பதை நன்கறிந்து 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் செயற்பாட்டை சிறந்த முறையில் மேற்கொண்டு வெற்றி கொண்டுள்ளார். தற்போதைய நிலையில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாத காரணத்தால் அரசாங்கம் தன் விருப்பத்துக்கு அமைய செயற்படுகிறது.

தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை சகல எதிர்க்கட்சிகளும் நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.