மதுபானங்களின் விலைகளை குறைக்க டயனா கோரிக்கை!

இரவு 10 மணிக்கு பின்னர் உறங்குவதற்காக சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தரவில்லை. இரவு பொருளாதாரத்தை அமுல்படுத்தாவிட்டால் சுற்றுலாத்துறையில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.

மதுபானங்களின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும். இல்லாவிடின் சாரயம் காச்சி குடிப்பவர்களினதும் போதைப்பொருள் பாவனையாளர்களினதும் எண்ணிக்கை அதிகரிக்கும். அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

சுற்றுலா பயணிகள் இரவு 10 மணிக்கு பின்னர் உறங்குவதற்காக இந்த நாட்டுக்கு வருவதில்லை. இலங்கையின் சுற்றுலாத்துறை  மையங்கள்  இரவில் திறக்கப்படாது இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் 10 மணிக்கு பின்னர் உறங்கிவிடுகிறார்கள். முதலில் 10 மணிக்கு தூங்கும் இந்த பழக்கத்தில் இருந்து விடுப்பட வேண்டும். மாலைதீவு போன்ற நாடுகளில் இவ்வாறு இல்லை. சுற்றுலாத்துறையினருக்காக விசேட திட்டங்கள் உள்ளன. உலக நடப்புக்கு அமைய சுற்றுலாத்துறையில் மாற்றம் ஏற்படுத்தாவிட்டால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.

இலங்கைக்கு இரவு நேர பொருளாதாரம் முக்கியமானதாகும். இலங்கை உலக நாடுகளுடன் தொடர்புபட வேண்டும். இவ்வளவு அழகான நாட்டை இப்படி இரவில் பூட்டி வைப்பதால் பலனில்லை. உலக நாடுகளில் 70 வீதம் இரவு நேர பொருளாதாரம் உள்ளது. இது தொடர்பில் யோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம்.

இரவு 10 மணிக்குப் பின்னர் சுற்றுலா ஹோட்டல்களில் பார்கள் மூடப்படுகின்றன.10 மணிக்கு  மேல்  மதுபானசாலைகளை ஏன் திறந்து வைக்க முடியாது. இவற்றை மாற்ற வேண்டும். இதேவேளை மதுபானங்களில் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாராயத்தின் விலை அதிகமாக இருக்கின்றது.

இதனால் மக்கள் கசிப்பு காச்சி குடிக்க நேரிடும். அத்துடன் போதை மாத்திரையை பயன்படுத்தும் நிலைமையும் ஏற்படும். இதனால் மதுவரித் திணைக்களத்திற்கு வருமானமே இல்லாமல் போகும். இதனால் விலைகளை குறைக்க வேண்டும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.