தபால் துறையை நவீனமயப்படுத்த அரச, தனியார் துறை இணைந்து வேலைத்திட்டம் – சாந்த பண்டார

தபால் துறையை நவீனமயப்படுத்துவது தொடர்பில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 பில்லியன் ரூபா செலவில் அரச மற்றும் தனியார் துறை இணைந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் என  ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது  ராஜிகா விக்ரமசிங்க எம் பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ராஜிகா விக்ரமசிங்க எம்.பி தனது கேள்வியில் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தபால் நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் உப தபால் நிலையங்களின்  எண்ணிக்கை எத்தனை என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை 4,003.  உப தபால் நிலையங்கள் 3,351ஆகும்.  அதிகமான தபால் அலுவலகங்கள் மத்திய மாகாணத்திலேயே காணப்படுகின்றன.

தபால் துறையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளில், குறிப்பாக மலையகப் பெருந் தோட்டப்பகுதிகள் மற்றும் கேகாலை மாவட்டத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

அதேவேளை, அண்மைக் காலமாக பல தபால் நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு வரும் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. அது தொடர்பில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபருடனும் பேச்சு வார்த்தை நடத்திஇருக்கிறோம்.

அத்துடன், தபால் துறையை நவீனமயப்படுத்தும்  நடவடிக்கைகள் டிஜிட்டல் மயப்படுத்தலோடு ஆரம்பிக்கப்படும், அரச மற்றும் தனியார் துறை இணைந்த வேலைத்திட்டமாக அது முன்னெடுக்கப்பட இருக்கிறது. அதேநேரம் தபால் நிலையங்களுக்கு பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்