முல்லை மாடுகளுக்கும் காணி இல்லை மனிதர்களுக்கும் காணிகள் இல்லை! ரவிகரன் தெரிவிப்பு

 

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையிலேயே மிக அதிகளவிலான நிலப்பரப்புக் காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்கள் குடியிருக்க காணியில்லாத நிலையில் வாழ்வதாகவும், 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் மேச்சல் தரையில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு நிலம் இல்லை. தொழில் முயற்சிக்கென 28 ஆயிரத்து 626 இளஞர், யுவதிகள் ஓர் ஏக்கர் வீதம் தமக்குக் காணி தருமாறு மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளபோதிலும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 2415 சதுர கிலோமீற்றர் தரையாகவும், 202 சதுரகிலோமீற்றர் உள்ளக நீர்ப் பிரதேசமாகவும் காணப்படுகின்றது.

இதில் கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் 222006 ஏக்கர், 36.72சதவீதமான நிலம் வனவளத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்டுக் காணப்பட்டது.

இந் நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் 167484 ஏக்கர் 30.37நிலப்பரப்பை வனவளத் திணைக்களம் மேலதிகமாக தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்துள்ளது.

தற்போது காடுபேணல் சட்டத்தின்கீழ் ஒதுக்கக்காடுகளாக மீண்டும் 42,631 ஏக்கர் 7.15சதவீதமான நிலப்பரப்பை வனவளத்திணைக்களம் கோரியுள்ளது. அவ்வாறு குறித்த நிலப்பரப்பும் வனவளத் திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டால் மொத்தமாக உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் 74.24சதவீதபான நிலப்பரப்பு வனவளத்திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்வாங்கப்பட்டுவிடும்.

மிகுதி நிலப்பரப்பில் பெரும்பகுதியை மகாவலி அபிவிருத்நி அதிகாரசபை, தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியமணல் திணைக்களம், படையினர் உள்ளிட்ட தரப்பினர் ஆளுகைசெய்கின்றனர்.

குறிப்பாக வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பரப்பில், மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைக்காக சுமார் 50,000ஏக்கர் காணி தேவையெனவும், விடுவித்துத் தருமாறு மாவட்டசெயலகம் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் முறையான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் வேறு திணைக்களங்கள் காணிக் கோரிக்கை முன்வைக்கும்போதும், குடியேற்றங்களுக்காக காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும் காணிகளை விடுவிக்கின்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389குடும்பங்களுக்கு இதுவரை குடியிருக்க காணியில்லாத நிலை காணப்படுகின்றது.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள நிலையில், குறித்த கால்நடைகளுக்குரிய மேச்சல்தரைவைகளும் இதுவரையில் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. நீண்ட காலமாக இவ்வாறு மேச்சல்தரைக்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றபோதிலும் இதுவரையில் மேச்சல்தரைக்குரிய காணிகள் வழங்கப்படவில்லை.

அந்தவகையில், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் குடியிருக்க காணியில்லாத நிலை காணப்படுவதுடன், கால்நடைகளுக்கு மேச்சல்தரை காணிகள் இல்லாதநிலை காணப்படுகின்றது – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.