இந்திய, சீன உறவுகளில் பதற்றங்கள் இல்லை ; நெருக்கமாக செயற்படுவதாக அலி சப்ரி அறிவிப்பு

இலங்கைக்கும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை, சீன ஆய்வுக்கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் அடிப்படையில் நடைபெறுகின்றமையால் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இலங்கைக்குள் போர் மற்றும் ஆய்வுக் கப்பல்கள் விமானங்களின் வருகைகளின் போது வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்காக ‘நிலையான செயற்பாட்டுப் பொறிமுறை’ வரைவொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் அமுலாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அடுத்த வாரம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விஜயம் செய்யவுள்ளதோடு, ஒக்டோபர் 25 சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் – 06’ வருகை தரவுள்ளது.

இந்த நிலைமையால் இலங்கை, இரு நாடுகளின் அதிகாரப் போட்டி அழுத்தங்களுக்குள் சிக்கியுள்ளதாகவும், இருதரப்பு உறவுகளில் பதற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை அரசாங்கமானது, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. அத்துடன், இரு நாடுகளும் இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றன.

இவ்வாறான நிலையில், சீனாவின் ஆய்வுக்கப்பல் வருகை, அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை என்பன இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களையோ பாதிப்புக்களையோ ஏற்படுத்தவில்லை.

குறித்த விடயங்கள் அனைத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்தியாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்திருக்கிறார். அதேபோன்று சீனாவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன விஜயம் செய்திருக்கிறார்.

ஜனாதிபதியின் விஜயத்தின்போது எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைவாக திருகோணமலையை பொருளாதார அபிவிருத்தி வலயமாக மேம்படுத்துவதற்கு இந்தியாவும் பங்களிக்கவுள்ளது. எரிபொருள், எரிசக்தி விடயத்திலும் அந்நாடு உடன்பாடுகளை எட்டியுள்ளது.

அதற்கு அமைவாக, செயற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்காக எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து உயர்மட்ட தரப்பினர் இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

ஆகவே அவ்விதமான விஜயங்கள் குழப்பங்களை ஏற்படுத்தப்போவதில்லை. இலங்கையானது அணிசேராக் கொள்கையை பின்பற்றி வரும் அதேநேரம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பொறிமுறை

இதேவேளை, இலங்கைக்கு வருகை தருகின்ற போர் மற்றும் ஆய்வுக் கப்பல்கள், விமானங்கள் சம்பந்தமாக வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

‘நிலையான செயற்பாட்டு பொறிமுறை’ (Standard operating procedure – SOP) குறித்த வரைவானது தயாரிக்கப்பட்டு இறுதியாகியுள்ளது. அதனை அடுத்துவரும் காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இதனூடாக தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் அச்சங்களைப் போக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதோடு, சர்வதேச நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை நிலையாக பேணுவதற்கும் உதவியாக இருக்கும் என்றும் நம்புகின்றோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.